Also Watch
Read this
By: Manigandan Raja

அனைவரும் முகக் கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தல்
டெல்லியில் ஆயிரத்து 777 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவரும் முகக் கவசம் அணியுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் அனைவரும், அடிப்படை சுவாச சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் முகக் கவசம் அணியும்படியும், அடிக்கடி கைகளை நன்றாக கழுவும்படியும், சுவாச தொற்றுகள் கொண்டவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் அல்லது தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவரை அணுகும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஜப்பான் பயணம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 4 நாள் பயணமாக இன்று ஜப்பான் செல்கிறார். டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கிறார்.

மேலும், நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை சந்திக்கும் அவர், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடுகிறார். அவருடன் பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழுவும் செல்கிறது.
குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்
கேரளத்தின் குருவாயூரப்பன் கோவிலில், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 437 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோவிலில் சிங்கம் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, ஒரே நாளில் மட்டும் 437 திருமணங்கள் நடந்தன.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை குருவாயூர் கோவில் தேவஸம் போர்டு செய்திருந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரத்யேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 60 திருமணங்கள் நடைபெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved