Also Watch
Read this
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே யமுனா விரைவுச்சாலையில், ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி தகவல்...
இந்த கோர விபத்து வெறும் எதிர்பாராத விபத்தல்ல. மாறாக ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் ஈவு இரக்கமற்ற அலட்சியத்தால் அரங்கேறிய படுகொ* என்பது தற்போது வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. தீப்பொறி ஏற்பட்டதை பயணிகள் எச்சரித்தபோதும், "போய் சாவுங்கள், பேருந்தை நிறுத்த முடியாது" என ஓட்டுநர் கொடூரமாகக் கூறியதாகப் பதிவாகியுள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

35 பயணிகளுடன்...
டெல்லியில் இருந்து மஹோபா நோக்கி 35 பயணிகளுடன் ராஜ் கல்பனா டிராவல்ஸ் என்ற தனியார் சொகுசுப் பேருந்து புறப்பட்டுள்ளது. நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில், யமுனா விரைவுச்சாலையின் 33ஆவது கிலோமீட்டரில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கேபினில் இருந்து திடீரென கருகிய வாடை வந்துள்ளது.

பதற்றமடைந்த பயணிகள் இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டபோது, அதைப் பொருட்படுத்தாத அவர்கள், பேருந்துகளில் இத்தகைய வாசனை வருவது சகஜம் தான் என அலட்சியத்தோடு, எச்சரிக்கையை காதில் வாங்காத அவர்கள், கேபினில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிகவும் திமிராக...
சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் இருக்கைக்கு அருகே மளமளவெனத் தீப்பற்றியுள்ளது.

பேருந்து முழுவதும் கரும்புகை சூழ்ந்ததைக் கண்டு அலறிய பயணிகள், உடனடியாகப் பேருந்தை நிறுத்துமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், சிறிதும் மனிதநேயமற்ற அந்த ஓட்டுநரும் நடத்துநரும், தங்களுக்குள் சிரித்துக் கொண்டபடியே, "போய் சாவுங்கள், நாங்கள் பேருந்தை நிறுத்த மாட்டோம்" எனத் திமிராகக் கூறியுள்ளனர்.


தப்பி ஓட்டம்
நிலைமை கைமீறிப் போனதைக் கண்ட அவர்கள், பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு, உள்ளே சிக்கிய பயணிகளைக் காப்பாற்ற எந்த சிறு முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன்பின்னர், உள்ளே சிக்கிய பயணிகள் தீயணைப்பு கருவியைக் கொண்டு கண்ணாடிகளை உடைத்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி உள்ளனர்.

ஆழ்ந்த தூக்கத்தில்...
இதுதொடர்பாக, பேசியுள்ள உயிர் தப்பிய ரின்கி ராஜ்புத், ‘நாங்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தோம். பேருந்து தீப்பிடித்து விட்டதாக யாரோ தட்டியெழுப்பிய பின்னர்தான் பதறியடித்து எழுந்தோம்.

உள்ளே முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. வெளியேற எந்த வழியும் தெரியவில்லை. செருப்பைக்கூட அணியாமல், கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு கூட்ட நெரிசலில் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு எப்படியோ வெளியே குதித்து தப்பினோம்,’ என்று, அந்த நள்ளிரவு கொடூரத்தைப் பற்றி கூறிஉள்ளார்.

அம்பலமான அத்துமீறல்கள்
இந்த கோர சம்பவம் தொடர்பாக பவன் குமார், யோகேஷ் தீக் ஷித் என்ற இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ரோஹித் என்ற நடத்துநரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தப் பேருந்து குறித்துப் பல விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்குச் சொந்தமான இந்தப் பேருந்து, பீகாரில் பதிவு செய்யப்பட்டு, ராஜஸ்தானில் தகுதிச் சான்றிதழும், ஹரியானாவில் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளது. மேலும், முறையான அனுமதி இன்மை, ஓட்டுநர் உரிமம் இல்லாதது என கடந்த பல மாதங்களாகப் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இந்தப் பேருந்து நிர்வாகம் அபராதமாகச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

எதிர்பார்ப்பு
ஆபத்து நேர்ந்தபோதும் பயணிகளைக் காப்பாற்றாமல் மரணத்தின் பிடியில் அவர்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் ஈவு இரக்கமற்ற செயலால் 9 அப்பாவிக் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இத்தகைய தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்துத்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved