news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

நா.த.க. பெண் நிர்வாகி அதிரடி கைது, வீடுபுகுந்து இழுத்து வந்த காக்கிகள்

இடைத்தேர்தல் பழைய கணக்கு வழக்கு

43

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தாராபுரம் தொகுதியில் நாதக வேட்பாளராக இடைத்தேர்தலை எதிர்கொண்டு தோல்வியை தழுவிய கார்த்திகாவையும், அவரது கணவரையும் போலீசார் அதிகாலையில் வீடுபுகுந்து கைது செய்தனர்.

நைட்டியில் இழுத்து வரப்பட்ட கார்த்திகா, தனக்கு நியாயம் கிடைக்காமல் உணவு அருந்தமாட்டேன் என அடம்பிடித்ததாக கூறப்படும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இடைத்தேர்தல் முடிந்து...
பிரச்சினைகள் நடந்த சூட்டோடு சூடாக கைது செய்திருந்தால்கூட காவல்துறை தங்கள் கடமையை கண்ணுங்கருத்துமாக செய்கிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், இடைத்தேர்தல் முடிந்து 2 வாரங்கள் கடந்தபிறகு வீடுபுகுந்து நாதக பெண் வேட்பாளரை நைட்டியோடு இழுத்து வரும் அளவுக்கு என்ன அழுத்தம்? அதுவும் அதிகாலையிலேயே கைது செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதே அக்கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் எழும் கேள்வி.

திமுக தலைவர் சென்ற வழியில்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலையொட்டி கடந்த 2ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றவழியில் நாதகவினர் அக்கட்சி வேட்பாளர் கார்த்திகா புகைப்படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதனை எடுக்குமாறுகூறிய இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம், வாக்குவாதம் செய்த நாதக நிர்வாகி குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்ற கார்த்திகா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தர்ணாவிலும் ஈடுபட்டார். அடுத்து சாலைமறியலிலும் ஈடுபட கைதான நாதக நிர்வாகி விடுவிக்கப்பட்டார்.

Related Link
கார்த்திகா கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கார்த்திகா கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


முதல்வர் விஜய் ரோடு ஷோ

இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப்பிறகு அதாவது 4ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, வீராச்சிமங்கலம் பகுதியில் பிரச்சாரம் செய்த நாதகவினர் சாலையை கடந்து சென்று பரப்புரையை தொடர முயன்றனர்.

முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாககூறி அவர்களை காவல்துறை காத்திருக்க வைத்தது.

காவலர்களுடன் வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ‘முதலமைச்சருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?,’ எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 100க்கும் மேற்பட்ட நாதகவினரை கைது செய்த போலீசார், ஊதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.

அதேபோல், காமராஜபுரத்தில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது பிரபு என்பவர் தவெக துண்டை அணிந்தபடி தன் குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் நாதகவினர் பிரபுவை தாக்கியதாக புகார் எழுந்தது.

வீடு புகுந்து...
இப்படி, இடைத்தேர்தல் நேரத்தில் தொடர்ந்து நாதகவினர் காவல்துறையிடம் ஏதோ ஒருவகையில் பிரச்சினை செய்வதும், அது தொடர்பாக கார்த்திகா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பாய்வதுமாகவே இருந்தது.

இந்நிலையில் தான், அத்தனை வழக்குகளுக்கும் சேர்த்து அதிகாலை 5.30 மணிக்கு கார்த்திகாவையும், அவரது கணவர் முருகு சந்திரகுமாரையும் கோவை விளாங்குறிச்சியில் உள்ள அவரது வீடுபுகுந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

நாதக நிர்வாகிகள் கைது
அதேபோல், நாதக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன், தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் காந்தி, மூலனூர் கந்தசாமி, தாராபுரம் நகரப் பொறுப்பாளர் ஷேக் பரீத், மாணவர் பாசறைச் செயலாளர் சூர்யா, சென்னையைச் சேர்ந்த பகுதி செயலாளர் கோகுல், சோழவந்தான் இளைஞர் பாசறைச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிங்காநல்லூர் தொகுதி ஐடி விங் நிர்வாகி மோகன பிரசாத்தும் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

காவல் நிலையத்தில் குவிந்த...
நைட்டியுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கார்த்திகாவை பெண் காவலர்கள் உள்ளே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது,
’ஏன் என்னை கைது செய்துள்ளீர்கள் என்பதே தெரியாதபோது, இழுத்துச் செல்வது எந்தவகையில் நியாயம்?’ என கேள்வி எழுப்பினார் கார்த்திகா.

இதனிடையே தகவல் அறிந்து காவல் நிலையம் முன்பு குவிந்த நாதகவினர், ஒரு பெண்ணை விடிந்தும் விடியாமலும் கைது செய்வது என்ன ஜனநாயகம்? என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நைட்டி உடன் அழைத்து வருவதா?
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் வழக்கறிஞர் நன்மாறன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் நீண்ட நேரமாகியும் கார்த்திகாவிடம் நடைபெறும் விசாரணை குறித்த உரிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, ’ஒரு பெண்ணை நைட்டியுடன் அழைத்து வருவதா? பெண் காவலர்கள்கூட இல்லாமல் தன்னை வீடுபுகுந்து அழைத்து வந்தது ஏன்? எனக்கு நீதி நியாயம் கிடைக்காமல் நகரமாட்டேன்,’ என உணவு உட்கொள்ளாமல் கார்த்திகா அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது.

கொந்தளித்த கார்த்திகா
இதுஒருபுறமிருக்க, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கார்த்திகா, போராளிகள் தெருவில் நிற்கிறோம், கோமாளிகளிடம் ஆட்சியை கொடுத்துள்ளதாக கொந்தளித்தார். மேலும், ஆளுங்கட்சிதான் வாக்கு சேகரிக்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டுமா? என ஆவேசமாக பேசியபடியும், முழக்கங்கள் எழுப்பியபடியும் மருத்துவமனைக்குள் சென்றார்.

பின்னர், பரிசோதனை முடிந்து காவல் வாகனத்தில் ஏறும்போதும் ஆவேசம் குறையாமல் இருக்க, கார்த்திகாவின் தலையை கட்டாயமாக அமுக்கி காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

Related Link
நாதக வேட்பாளர் கைதுக்கு உதயநிதி கண்டனம்

நாதக வேட்பாளர் கைதுக்கு உதயநிதி கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

43
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved