இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இணைந்துள்ள கூமாபட்டி கிராமத்தை நோக்கி பலரும் படையெடுத்து வரும் நிலையில், அங்குள்ள நிலங்களின் மதிப்பும் ஏகத்துக்கு உயர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலும் உச்சம் பெற்றுள்ளது. ஒரு ரீல்ஸால் ஒட்டுமொத்த கிராம மக்களும் சூரிய வம்சம் பட சரத் தேவையாணி போல பல பிசினஸ்களுக்கு பிளான் செய்து வருகிறார்களாம்....!இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயம் ஏன் டிரெண்டாகிறது? எதற்கு டிரெண்டாகிறது? என்ற காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கும்... அப்படி தான் சமீபத்தில் தண்ணீரில் மஞ்சள் பொடி தூவும் ரீல்ஸ் இணையத்தை சுற்றிவருகிறது. அதையும் சிலர் வித்யாசமாகவும் செய்து தங்களது கிரியேடிவிட்டியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தான், கடந்த இருநாட்களாக கூமாபட்டி என்ற பெயர் இன்ஸ்டாவை திறந்தாலே மூளைமுடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏங்க... என தொடங்கும் அந்த குரல் மன அழுத்தமா? காதல் தோல்வியா? நிம்மதி வேண்டுமா? கூமாபட்டிக்கு வாங்க என குளித்து கொண்டே கூவி கூவி அழைத்த ஒருவர் தான் இந்த டிரெண்டுக்கே வித்திட்டது என தெரியவந்துள்ளது. ஊர் ஒருபுறம் என்றால் அதனை ரீல்ஸ் எடுத்து பதிவிட்டவரின் முகபாவனைகளும் வார்த்தை உச்சரிப்புகளும் மீம்ஸ் கண்டண்டுகளாகவே மாறிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தாமரை குளத்தை மெச்சி பேசும் அந்த நபர், தண்ணீர் சர்பத்தை போல் இருப்பதாக கூறி இணையவாசிகளை டெம்ப்ட் செய்கிறார்.சாதாரணமாகவே பயணங்களை பெரிதும் விரும்பும் பலர், மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை சூழலையே விரும்புவர். அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாகவே கூமாபட்டி அமைந்திருப்பதாக ரீல்ஸ் பரவவே பலரும் பெட்டி படுக்கைகளுடன் கூமாபட்டியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.இதையே ஒரு சாக்காக வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் கூமாபட்டி நிலங்களின் மதிப்பை கூட்டி விளம்பரமும் செய்ய தொடங்கிவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமம் இயற்கை எழில்கொஞ்சும் கிராமமாக இருந்தாலும், அங்கு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நாய் தொல்லை இருப்பதுதான் எதார்த்தமான உண்மை. ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரியும் நிலையில், அதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து ஒரேநாளில் 40க்கும் மேற்பட்டோரை கடித்து பதம்பார்த்திருப்பதாக உள்ளூர்வாசிகள் குமுறுகின்றனர்.எனவே கூமாபட்டிக்கு செல்வோர் எதைஎடுத்து செல்கிறீர்களோ இல்லையோ கையில் ஒரு பிரம்பையும், பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பொதுநலன் கருதி நாம் வெளிப்படுத்தும் செய்தியாகும்.