news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தேசிய விருதுகள் தராசு மாறிவிட்டதா? விருதுக்கு தகுதி கலைநயமா? காசா?
tv

Also Watch

tv

Read this

தேசிய விருதுகள் தராசு மாறிவிட்டதா? விருதுக்கு தகுதி கலைநயமா? காசா?

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

72ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகி, சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமூக வலை தளங்களில்...
தியேட்டர்களில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட வாழை, லப்பர் பந்து போன்ற தகுதியான பல கலைப்படைப்புகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வணிக ரீதியான வெற்றிகளுக்கு மட்டுமே மகுடம் சூட்டப்பட்டு, தமிழ் சினிமாவின் ஆன்மாவாக விளங்கிய படைப்புகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கமெண்ட்டுகளாக கொட்டி வருகின்றனர்.

ஆகச்சிறந்த கலை படைப்புகள்
தேசிய விருதுகள் என்றாலே ஒரு காலத்தில் கலைநயமிக்க, ஆழமான படைப்புகளுக்கான அங்கீகாரமாக பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு அறிவிக்கப்பட்டுள்ள 72ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல், விருதுகளின் தராசு மாறிவிட்டதோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வணிக ரீதியான வெற்றிகளுக்கும், பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழ் சினிமாவின் ஆன்மாவாக கொண்டாடப்பட்ட பல ஆகச்சிறந்த படைப்புகள் ஓரங்கட்டப்பட்டிருப்பது தான் நெட்டிசன்களின் இந்த ஆதங்கத்திற்கு காரணம்.

கேள்வி மேல் கேள்வி
கடந்த 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு, பல புதுமையான, எதார்த்தமான கதைக் களங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், தேசிய விருதுப் பட்டியலில் அந்த படங்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜின் சுயசரிதை கலந்த படைப்பான வாழை திரைப்படம், உழைக்கும் வர்க்கத்தின் வலியையும், குழந்தைகளின் பசியையும் அத்தனை நேர்த்தியாக பேசியிருந்தது. அவரது முந்தைய படங்களை போலவே, இந்த மாஸ்டர் பீஸும் தேசிய விருது குழுவால் தொடர்ந்து தவிர்க்கப்பட்டிருப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லப்பர் பந்து புறக்கணிப்பு
அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம், தமிழர்களின் ரத்தத்தோடு ஊறிய தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து, சாதிய குறியீடுகளையும் எதார்த்தமான கிராமத்து மனிதர்களின் உணர்வுகளையும் மிக ஆழமாக பதிவு செய்திருந்தது. தியேட்டர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த தகுதியான படைப்பிற்கு ஒரு சிறு அங்கீகாரம் கூட கிடைக்காதது ஏனோ என நெட்டிசன்கள் தங்களது ஆதங்க கணைகளை வீசி வருகின்றனர்.

விந்தையிலும் விந்தை
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற கொட்டுக்காளி, அசல் சினிமாத்தனமற்ற ஒரு தூய்மையான கலைப்படைப்பு. மூடநம்பிக்கைகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் அக்குவேறு ஆணிவேறாக தோலுரித்து காட்டிய இந்த திரைப்படமும் விருது குழுவின் பார்வையில் படாமல் போனது விந்தையிலும் விந்தை என ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளாக பதிவிட்டுள்ளனர்.

தங்கலான், ஜமா...
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரமின் அசாத்திய நடிப்பில், வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு பிரம்மாண்டமான படைப்பு தங்கலான். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றைப் பேசிய இத்திரைப்படத்தின் கலைநயமும், உழைப்பும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல், பெண் வேடமிடும் கூத்துக் கலைஞனின் அசாத்திய திறமையையும், குழுவிற்குள் நடக்கும் ஈகோ அரசியல் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அக்மார்க் எதார்த்தத்தோடு பேசிய படம் ஜமா. திரைக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்களின் வலியை படம் பிடித்த இந்த அசுர உழைப்புக்கு, எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை.

முக்கிய விருது இல்லை
குடும்ப விரிசல்களையும் தாயின் அன்பையும், எமோஷன் மற்றும் நகைச்சுவையோடு செதுக்கியிருந்த ஜே.பேபி திரைப்படமும் விருதுகளின் பட்டியலில் விடுப்பட்டிருப்பது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பில், மனித உறவுகளின் உன்னதத்தையும், அன்பையும் மிக மென்மையாக, அதே சமயம் ஆழமாக பேசிய மெய்யழகன் திரைப்படம், ரசிகர்களின் இதயங்களை வென்றது. ஆனால், இப்படத்திற்கு ஒலிப்பதிவாளர் சுரேன் ஜி-க்கு கிடைத்த சிறப்பு பாராட்டு தவிர, வேறு எந்தவொரு முக்கிய விருதும் அறிவிக்கப்படாதது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

எதன் அடிப்படையில் தேர்வு?
மறுபுறம், தனுஷ் இயக்கத்தில் வெளியாகி, வணிக ரீதியாக 160 கோடி வரை வசூல் செய்த ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படம் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வணிக ரீதியான வெற்றி ஒரு படத்திற்கு விருது வழங்குவதற்கான தகுதியாக மாறலாமா? ராயன் படத்தை விடவும், மேலே குறிப்பிட்ட ஆக்கப்பூர்வமான, கலைநயமிக்க எத்தனையோ படைப்புகள் வரிசைகட்டி நின்றபோது, இந்த தேர்வு எதன் அடிப்படையில் நடந்தது? என்ற விமர்சன கணைகளை நெட்டிசன்கள் தொடுத்து வருகின்றனர்.

எந்த விதத்தில் நியாயம்?
தமிழ் சினிமா மட்டுமல்லாது, அண்டை மாநிலமான மலையாளத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஆடு ஜீவிதம் போன்ற மாஸ்டர்பீஸ் திரைப்படங்களும் இந்த விருதுகளில் கண்டுகொள்ளப்படாமல் விடுபட்டுள்ளது, தேர்வுக் குழு மீதான நம்பகத்தன்மையையே நெட்டிசன்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆக்கப்பூர்வமான நல்ல கலைப்படைப்புகளை புறக்கணித்துவிட்டு, வெறும் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு மட்டுமே மகுடம் சூட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Link
அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்

அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாக்கை மடித்து செய்தியாளர்களிடம் அத்துமீறிய தூத்துக்குடி ADSP

3
9 hrs 15 mins agoshare
TUT ADSPbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau