Also Watch
Read this
Posted on: Sep 17, 2025 01:50 PM
By: Web Team

ஆப்பிரிக்க நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.20 கோடி மதிப்புடைய, 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் தலைநகர், அடிஸ் அபாபாவில் இருந்து, பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வந்தது.
இந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், குறிப்பிட்ட பயணிகள் விமானம், சென்னையில் வந்து இறங்கி, அதில் உள்ள பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி, வெளியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது, கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலா பயணி விசாவில், சென்னைக்கு வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதை அடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரித்தனர். அவருடைய உடைமைகளை சோதித்த போது, உடைமைகளுக்குள் சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சாக்லேட் பாக்கெட்டுகளை எடுத்து, பிரித்துப் பார்த்தபோது, போதை பொருளை, சாக்லேட் போல் தயார் செய்து மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
கென்யா நாட்டு இளைஞரிடம் இருந்து, 2 கிலோ போதை பொருளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், கென்யா நாட்டு இளைஞரை கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, சென்னை தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved