Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், குலதெய்வம் கோவிலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ருவந்திகா மற்றும் 60 வயது முதியவர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆட்டோ ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஆட்டோ திருப்புவனம் புதூர் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. ஆட்டோவுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். மோதிய வேகத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 5 வயது சிறுமி ருவந்திகா மற்றும் 60 வயது முதியவர் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்த பயங்கர விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவத்தால் மதிச்சியம் மற்றும் திருப்புவனம் புதூர் பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் நிலவி வருகிறது.