Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை மணலி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் பகுதிகளைச் சேர்ந்த, ஒரே வயதுடைய இரண்டு 17 வயது சிறுமிகள் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களில், இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அனுஷ்கா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மற்றும் மணலி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருவரின் உடல்களுக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலில் அனுஷ்காவின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பி.எம். (Post Mortem) எண் வழங்கப்பட்டதாகவும், பின்னர் பிரியதர்ஷினியின் உடலுக்கும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர், உடற்கூறு பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் உறவினர்களிடம் தங்களது வழக்கிற்கான டோக்கன் எண்ணை கேட்டுள்ளனர். அப்போது, டோக்கன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, பி.எம். எண் மாற்றி வைக்கப்பட்டிருந்ததால், பிரியதர்ஷினியின் உடல் என நினைத்து கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அனுஷ்காவின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி மணலி பகுதிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

உடல் வந்துவிட்டதாக நம்பிய பிரியதர்ஷினியின் உறவினர்கள் அதை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதேநேரத்தில், அனுஷ்காவின் உடலை பெற்றுக்கொள்ள காத்திருந்த கும்மிடிப்பூண்டி உறவினர்களிடம், மற்றொரு உடல் வழங்கப்பட்டபோது, "இது அனுஷ்காவின் உடல் இல்லை" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு மருத்துவர்கள் மீண்டும் சரிபார்த்தபோது, இரு சிறுமிகளின் பி.எம். எண்கள் மாற்றி பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மணலி பகுதியில் பிரியதர்ஷினியின் இல்லத்திற்குச் சென்ற உடலை உறவினர்கள் பார்த்தபோது, அது பிரியதர்ஷினியின் உடல் அல்ல என்பது தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அனுஷ்காவின் உடலை கொண்டு சென்ற அதே அமரர் ஊர்தியில் மீண்டும் அந்த உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், இரு சிறுமிகளின் உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்பட்ட இரண்டு சிறுமிகளின் உடல்கள், பி.எம். எண் மாற்றம் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாற்றி வழங்கப்பட்டதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.