Also Watch
Read this
திருச்செந்தூரில் தன்னிடமே லஞ்சம் வசூலித்தவர்களிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கி விட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாகக் கூறுவது பொய் என்றும்,
விளக்க கடிதம் பெறப்பட்டிருப்பதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதி கூறி உள்ளார்.

டி-ஷர்ட் அணிந்து வந்த அமைச்சர்
திருச்செந்தூர் முருகன் கோயிலில், பொதுமக்களில் ஒருவராக டி-ஷர்ட் அணிந்தபடி எளிய முறையில் இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை அடையாளம் காணாத அர்ச்சகரில் சிலர், அமைச்சரின் உதவியாளரை அணுகி, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விஐபி தரிசன வழியில் அழைத்து செல்வதாக கூறி உள்ளனர். இதையடுத்து அந்த ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கும் நோக்கில், ஜி-பே வழியாக பணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து உள்ளார்.

கையும் களவுமாக...
அதன் பின்னர், அர்ச்சகர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்து, அவர்கள் கைப்படி விளக்க மற்றும் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். இதனிடையே, தவறு செய்தவர்களும், அமைச்சரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உயர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மன்னிப்பு கடிதம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக இணையத்தில் குற்றச்சாட்டு எழுந்தன.
பாகுபாடு காட்டினேனா? - அமைச்சர் ரமேஷ்
இதனை தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் கூறியதாவது;
பக்தர்கள் தரப்பிலிருந்து பல்வேறு வழிகளில் என்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதன்படியே யாரும் எதிர்பாராத விதமாக, இன்று விடியற்காலையில் ஆய்வு செய்தேன். அப்போது பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை கண்டுபிடித்தோம். அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும், பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னித்துவிட்டு விட்டோம் என இணையத்தில் ஒரு தவறான தகவல் பரவுகிறது. ஆனால், அவர்களிடம் விளக்கம் கேட்டு விளக்க கடிதம் மட்டுமே வாங்கியுள்ளோம். எப்படி, எதற்காக பணம் வாங்கிக் கொண்டு மக்களை உள்ளே அனுமதித்தீர்கள்? என விளக்கக் கடிதம் வாங்குவது ஒரு நடைமுறை. இதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விரிவான ஆய்வு
கட்டண வசூல் மட்டுமின்றி அன்னதான கூடம், கோயில் சொத்து பற்றிய ஆவணங்கள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் எங்கெல்லாம் தடைபட்டுள்ளன? தேவையான அடிப்படை வசதிகள் என்ன? தூய்மையாக பராமரிக்க செய்ய வேண்டியது என்ன? பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான வழி என்ன? என்பது பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இதன் முடிவில் தொடர்புடைய, உண்மையிலேயே குற்றம் செய்த யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன்பாக தவறான தகவலை வெளியிட்டு, ஒருசாரார் மீது மிருதுவாக நடந்துகொள்வதாக பரப்பி வருகின்றனர். அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் விளக்கம் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved