Also Watch
Read this
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவளக் கொள்ளை சம்பவங்களை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வரும் நிலையில், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, விதிமீறல்களில் ஈடுபட்ட 20 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்து, அதிரடி காட்டியுள்ளார்.
கனிம வளங்கள் கடத்தல்
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு நியூஸ் தமிழ் செய்தியாளர் குழுவினர் நேரில் சென்றனர். அப்போது, கனிம வளங்களை லாரியில் வெட்டி எடுத்து சென்றது தெரிய வர, இதனை படம் பிடித்ததை கண்ட ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். கனிம வளங்கள் எடுத்து செல்ல உரிய அனுமதி உள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பிய உடனே ஓட்டுநர் அங்கிருந்து நைசாக நழுவ முயன்றார். தமக்கு எதுவுமே தெரியாது என்றும், தாம் இன்றைக்கு தான் வேலைக்கு வந்திருப்பதாகவும் கூறியபடி, தப்பினார்.

தோட்டத்துக்காரர் என வந்து வசமாக சிக்கியவர்
பின்னர், அங்கு வந்த நபர், முதலில் தோட்டத்துக்காரர் என பேச்சை தொடங்க, நேரம் செல்ல, செல்ல லாரி மட்டும் தான் என்னுடையது என அவரே வாக்குமூலம் அளித்தார். தன்னுடைய பெயர் வேலவன் என்றும், தெரியாமல் வந்து சிக்கியதாகவும், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், செய்தியாளர் குழுவிடம் போராடினார். ஒரு கட்டத்தில் செய்தியாளர் காலில் விழுந்து இந்த ஒரு முறை மட்டும் விட்டு விடுங்கள் என கெஞ்சினார்.

கிராம மக்கள் குற்றச்சாட்டு
இதேபோல், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகலஅள்ளி கிராமத்தில் அரசு அனுமதித்த அளவை மீறி, கிராவல் மண் வெட்டி எடுத்து சென்று விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு சுரேஷ் என்பவர் கிராவல் மண் எடுக்க உரிமம் பெற்றார். அதனை தொடர்ந்து கிராவல் மண் வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த வேதியரேந்தல் கிராமத்தில் பட்டா இடத்தில் செம்மண் வெட்டி எடுத்த கும்பலை தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். முதலில் ஆவணங்கள் உள்ளதாக கூறிய செம்மண் வெட்டி எடுத்த கும்பல், கடைசி வரை ஆவணங்களை காட்டாத நிலையில், மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, போலீசார் விசாரணைக்கு அறிவுறுத்தினர்.

அதிகாலையில் அமைச்சர் ஆய்வு
ஒரு பக்கம், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், இதனை தடுக்க அந்த துறையின் அமைச்சர் டி.கே.பிரபு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி தென்காசி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் அம்மாவட்டத்தில் உள்ள 54 கல் குவாரிகளில் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும், தமிழகம், கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அதிகாலை 2 மணிக்கு அமைச்சர் டி.கே.பிரபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், சோதனையில் 18 கல்குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதால் தற்காலிகமாக மூட உடனே உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணை குழுவின் விரிவான அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விரிவான ஆய்வறிக்கை, விரைவில் நடவடிக்கை
கன்னியாகுமரியில் உள்ள 15 கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்ட போது இரண்டு குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதால் தற்காலிகமாக மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சமர்ப்பிக்கும் விரிவான ஆய்வறிக்கை அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved