Also Watch
Read this
By: Manigandan Raja

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வேப்பமரத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்களும், ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை 58 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
கிராம பல்நோக்கு மைய கட்டிடத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் கழிவறை அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்கள் தினந்தோறும் குடத்தில் தண்ணீர் கொண்டு போய் கழிவறை பக்கெட்டில் நிரப்புகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் கணினி வகுப்பறை 17.30 இலட்சம், இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூபாய் 34.60 இலட்சம், சமையலறை கட்டிடம் 6.85 இலட்சம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் சுகாதார வளாகம் 9.92 இலட்சம், ஆண்கள் சுகாதார வளாக கட்டிடம் ரூபாய் 7.78 இலட்சம், பேவர் பிளாக் சாலை ரூபாய் 10.85 இலட்சம் என சுமார் 87.30 இலட்சம் மதிப்பில் புது பொலிவுடன் நான்கு வகுப்பறை கட்டிடம், மாணவ, மாணவிகள், மாற்று திறனாளிகளுக்கு தனித்தனியாக நவீன வசதி கொண்ட கழிப்பறைகள், சமையல் கூடம் கட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதில் வகுப்பறை கட்டிடங்கள் முழுவதும் வெளி மற்றும் உள் சுவற்றில் மாணவர்களை கவரும் வகையில், கணித வாய்ப்பாடு, தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், வார நாட்கள், காய்கறிகள்,
பழங்கள், பூக்கள், பறவைகள், தேசிய விலங்கு, தேசிய பறவை மற்றும் அறிவியல் பாடத்தில் வரும் உடல் பாகங்கள் உள்ளிட்டவைகள் வரையப்பட்டு வகுப்பறை அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து புது கட்டிடத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் பழைய இடத்திலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் புது வகுப்பறைக்கு செல்லும் ஆர்வத்தோடு இருந்த மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிய கட்டிடத்தை பயன்படுத்துவதற்கு கழிவறைக்கு தண்ணீர் வசதி
இல்லாததால் அதை பயன்படுத்த முடியாமல், பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது.
மேலும் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு எதுவும் அமைக்கப்படாததால் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. மீண்டும் பழைய வகுப்பறையில் குறுகிய இடத்திலேயே எட்டு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஊருக்கு வெளியே இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுசுவர் அமைக்க வேண்டும். எட்டு வகுப்புகளுக்கு நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருப்பதால், கூடுதலாக இன்னும் நான்கு வகுப்பறைகள் கட்ட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவிடம் கேட்ட போது, வேப்பமரத்துர் நடுநிலைப் பள்ளிக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாத புகார் எதுவும் எனது பார்வைக்கு வரவில்லை.
தற்காலிகமாக கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்ற குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குழாய் அமைத்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிவறைக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
மேலும் தருமபுரி நாடாளுமன்ற மேம்பாட்டு நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை பெற்று, பள்ளிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் வகுப்பறைக்கு கூடுதலாக கட்டிடங்களும், சுற்றுச்சுவரும் கட்டி தரப்படும் என தெரிவித்துள்ளார்.