Also Watch
Read this
ஈரோடு அருகே பட்டியலினத்தை சேர்ந்த ஒரு முதியவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவரின் காலில் விழுந்து இருவர் கெஞ்சி மன்றாடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் முன்னிலையிலேயே இருவர் காலில் விழுவது ஆதிக்க சமூகத்தின் சாதிய அடக்குமுறையை தெள்ளத்தெளிவாக காட்டும் நிலையில், தன்னைமீறி சடலத்தை அடக்கம் செய்ததால் இனி பட்டியலினத்தவர்கள் யாரும் தங்கள் தோட்டங்களுக்கு வேலைக்கு வர கூடாது என, ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர் கூறியுள்ளது மேலும் அதிர வைத்துள்ளது.

அன்றும் இன்றும்
கோவிலில் மாற்று சமூகத்தினர் போட்ட பூட்டை உடைத்து, பட்டியலின மக்களின் மனதில் பாலை வார்த்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் எஸ்பி. ஆனால், பட்டியலினத்தை சேர்ந்த இருவர், ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவரின் காலில் தனது கண்முன்னே விழுந்தும்கூட எஸ்ஐ செல்வராஜ், கல்போன்று நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே பலரது ஆதங்கம்.

பொது மயானம் இருந்தும்...
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பெரும்பாளி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் யாரேனும் மரணமடைந்தால் ஓடைகள், கால்வாய் ஓரங்கள், பாறைக்குள்தான் கடந்த 80 ஆண்டுகாலமாக புதைத்து வருகின்றனர்.
அருகிலேயே, பொது மயானம் இருந்தும் ஆதிக்க சமூகத்தினரின் எதிர்ப்பால், 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றுதான் பட்டியலின மக்களின் சடலத்தை அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

80 வயது முதியவர்
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி காளியப்பன் என்பவரது தந்தையான 80 வயது முதியவர் சென்னி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். காலங்காலமாகவே சாதிய அடக்குமுறையில் கட்டுண்டு கிடக்கும் நாம் அதனை உடைத்தெறிய வேண்டும் என்றநோக்கில், சென்னியின் சடலத்தை பொதுமயானத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்த உறவினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம ஊராட்சி செயலருக்கு தகவலும் கொடுத்துவிட்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ரிதுபரன் உள்ளிட்ட சிலர் பட்டியலின மக்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரச்சினை செய்துள்ளனர்.

வயிற்றில் நெருப்பை அள்ளிப்போட்டு...
ஆனால், அதனையும் மீறி சென்னியின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த ரிதுபரன் தங்களின் தோட்டங்களுக்கு இனி பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட யாருமே பணிக்கு வரக்கூடாது என கட்டளை விதித்தார்.
அங்குள்ள விவசாய தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த பட்டியலின மக்களுக்கு ரிதுபரனின் கட்டளை வயிற்றில் நெருப்பை அள்ளிப்போட்டது போன்று இருந்தது.

காலில் விழுந்து...
பிள்ளைகள் பட்டினி கிடப்பார்களே? என பதறிய பட்டியலினத்தை சேர்ந்த இருவர் வயது வித்தியாசம்கூட பார்க்காமல் கையெடுத்து கும்பிட்டு, ரிதுபரனின் காலில் விழுந்து தங்களின் பிழைப்பில் மண் அள்ளிப்போட வேண்டாம் என்பதுபோல கெஞ்சினர்.
இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் எழும் முதல் கேள்வியே எஸ்.ஐ. செல்வராஜ் முன்பே இருவர் ரிதுபரனின் காலில் விழுந்துள்ளார்கள் என்றால் சாதிய அடக்குமுறை எந்த அளவுக்கு ஆழமாய் இருந்துள்ளது என்பதுதான்.
அப்படியானால், சாதிய அடக்குமுறைக்கு அதிகாரிகளே துணை போகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதில் என்ன பாகுபாடு?
இது ஒருபுறமிருக்க, பொது மயானம் என்கிறபோதே அதில் அனைத்து சமூக மக்களையும் அடக்கம் செய்யலாம். ஆனால், ரிதுபரன் ஏன் தடுக்க வேண்டும்? புதைத்த சில ஆண்டுகளிலேயே புழுக்களும், மண்ணும் தின்று அழியும் மனித சடலத்தில் கூடவா சாதிய பாகுபாடு? எங்கு புதைத்தால் என்ன? இதில் என்ன ரிதுபரனுக்கு வறட்டு கௌரவம்? 2026 ஆம் ஆண்டில்கூடவா சாதிய பாகுபாடு? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, பட்டியலினத்தை சேர்ந்த இருவரை காலில் விழ வைத்த ரிதுபரன் உள்ளிட்டோர் மற்றும் அதனை வேடிக்கை பார்த்த அதிகாரிகள் தான் முதல் குற்றவாளிகள் என்றும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்புன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு பேர் மீது வழக்கு
இதனை தொடர்ந்து ரிதுபரன் உள்ளிட்ட 7 பேர் மீது எஸ்சிஎஸ்டி பிரிவின்கீழ் வழக்குப்பதிவானது. ஆனால், வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மீது தற்போதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.
இதனிடையே, ரிதுபரனின் காலில் விழுந்த செந்தில் என்பவரிடம் ஆர்டிஓ முத்துச்சாமி எழுதி வாங்கியதாக கூறப்படும் ஒரு கடிதம் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. மதுபோதையில் காலில் விழுந்துவிட்டதாகவும், தான் காலில் விழுந்தபோது சம்மந்தப்பட்ட நபர் விலகிவிட்டதாகவும் அந்த கடிதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தும், செந்திலின் கையெழுத்தும் வெவ்வேறு விதமாக உள்ளது. அவர் தன் கைப்பட கடிதம் எழுதவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

இந்த கடிதம் குறித்தும், நடந்த சம்பவம் குறித்தும் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துச்சாமியை அழைத்து நியூஸ் தமிழ் செய்தியாளர் விபரம் கேட்டபோது, ’யாரும் புகார் கொடுக்காதபோது நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
அதோடு, காலில் விழுந்த செந்திலே தானாக வந்துதான் லெட்டர் எழுதி கொடுத்ததாகவும், நாங்களாக எழுதி வாங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

உண்மை நிலவரம்...
இப்படி, பட்டியலின மக்கள் தரப்பில் அழுத்தமான குற்றச்சாட்டும், அதிகாரிகள் தரப்பில் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டிருந்தாலும் இந்த விவகாரத்தில் ஏதோ மூடிமறைக்கப்படுக்கிறது என சந்தேகப்படும் சமூக ஆர்வலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் இதில் தலையிட்டு விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும், குற்றச்சாட்டுகளுக்கு தீர்வும் கிடைக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved