Also Watch
Read this
முன்னாள் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவர் நான்காம் தர பேச்சாளரை போல் பேசக்கூடாது என்று, எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். 2024ஆம் ஆண்டு எம்.பி. சீட் தருவதாக சொல்லி ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று, ஒப்பந்தத்தை காட்டி பிரேமலதா ஆவேசம் அடைந்துள்ளார்.
திருவண்ணாமலையில் பிரேமலதா
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரேமலதா விஜயகாந்த், நவகிரகத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது;
நாளை விருதாச்சலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து, மூன்று நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர், 200 தொகுதிக்கு மேல் அமோக வெற்றி பெற்று, ஏழாவது முறையாக மீண்டும் முதலமைச்சராக, ஸ்டாலின் அரியணை ஏறுவார்.

இபிஎஸ் குறித்து விமர்சனம்
முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று எதிர்க்கட்சித்
தலைவராக இருக்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒருவரின் வார்த்தை கண்ணியமாகவும் மற்றவர்கள் மதிக்கும் அளவிலும் இருக்க வேண்டும். மூன்றாம் தர நான்காம் தர பேச்சாளர்கள் பேசுவதைப் போல் இருக்கக் கூடாது. ஒரு முதலமைச்சரை பற்றி பேசுவது கண்டிக்கத்தக்க விஷயம். தேமுதிகவில் கேப்டன் கட்டுப்பாடோடு வளர்த்திருக்கிறார். மற்றவர்களை குறை சொல்வது, திட்டுவது போன்றவற்றுக்கு மே 4ஆம் தேதி, நிச்சயம் அதற்கான பலனை அடைவார்.

புலம்பல், வயிற்றெரிச்சல்
எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவை அரை சதவீதம் ஓட்டு என்று சொல்கிறார். அவருக்கு வயிறு எரிகிறது. தமிழ்நாடு முழுக்க அந்த கருகும் சுவாசம் வருகிறது. 2011 முதல் 2026 வரை உங்கள் கூட தானே இருந்தோம். நாங்கள் கூட்டணியில் இருக்கும் போது அருமை தெரியவில்லை. கூட்டணியை விட்டு இன்று வெளியே வந்தவுடன் வயிற்றெரிச்சலோடு புலம்புகிறார்.

தேர்தல் ஒப்பந்தம், கையெழுத்து
நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டதை நான் இதுவரை காட்டியதே இல்லை. முதல் முறையாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வைத்து காட்டுகிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் எங்கே போட்டுக் கொடுத்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அரசியல் மரியாதை காரணமாகவும் தர்மத்தை கடைபிடித்தும் இதுவரை நான் காட்டியதில்லை. அதனைக் காட்ட வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து எம்பி சீட்டு, ஒரு ராஜ்ய சபா சீட்டு கொடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி கூறிய வார்த்தையை நம்பினோம், நம்பிக்கைக்கு புறம்பாக பேசுகிறார். ஐ சி யு என்று சொல்லக்கூடியவர் மே 4ஆம் தேதி, ஐசியுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்று அருணாச்சலேஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மே 4ஆம் தேதி உங்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved