Also Watch
Read this
விருதுநகர் மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் ஆணையிட்டால் படத்தில் விஜயகாந்துக்கு ஆதரவாக வாக்கு கேட்டு நடித்த தான், இப்போது அவரது மகனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளதாகவும் பாடல் பாடி வாக்கு சேகரித்தார்.

கொட்டும் மழையில் இறுதிச்சடங்கு செய்தவர் கலைஞர்
தாம் சொன்ன பொய்யை மறைக்க அடுத்தடுத்து பொய்களை அவிழ்த்துவிடுவதாக இபிஎஸ் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். காமராஜருக்கு ஒரு மகனாக இருந்து கொட்டும் மழையிலும் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டவர் கலைஞர் என்று உணர்ச்சி பொங்க பேசினார். துரோகத்துக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம் செய்ததுடன், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், தனபால் என எண்ணவே முடியாத அளவுக்கு இபிஎஸ்சின் துரோக பட்டியல் நீள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

விருதுநகரில் மு.க.ஸ்டாலின்
விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுகவை போல் சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் நம்பி, இபிஎஸ் பரப்புரை செய்கிறார் பழனிசாமி என்று சொன்னால் அது பொய், பித்தலாட்டம் என்று தான் பொருளாகும். ‘பழனிசாமி சொன்ன பொய்கள்’ என்று, ஒரு புத்தகமே போடலாம், அந்த அளவுக்கு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியை பற்றி, பச்சை பொய்யை பேசிய பழனிசாமிக்கு, நெல்லையில் பதிலடி கொடுத்தேன்.

வதந்தி, வாந்தி
சங்கி கூட்டணியில் சேர்ந்ததால், வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். காமராஜர் மறைவுற்ற போது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் கருணாநிதி, இது வரலாறு. பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இது சர்ச்சையாகி இருக்கும். ஆனால், அப்படி எதுவுமே இல்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கருணாநிதியை புகழ்ந்து தான் எழுதியிருக்கிறார்கள். முந்தாநாள் அடித்த காற்றில் முதல்வராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பது தான் நல்ல மனிதருக்கான இலக்கணம். அதை விட்டுவிட்டு, மேலும் மேலும் பொய்களை சொன்னால், பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுத் தான் போவார்.

அரசு ஊழியர்கள் ஏமாற்றம்?
இப்போது புதிதாக இன்னொரு பொய்யை சேர்த்திருக்கிறார். ”அரசு ஊழியர்களை ஆசை வார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்றிவிட்டது” என இபிஎஸ் பேசியிருக்கிறார்.
நிறைவேற்றவே முடியாது என்று சொன்னதை நாம் செய்துவிட்டோம் என்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், கடுப்பில், இப்படி எல்லாம் இபிஎஸ் பேசிக் கொண்டு திரிகிறார். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தி இபிஎஸ் பேசி உள்ளார். அவர்களிடம் இருந்து, ஸ்வீட்டும் கிடைக்காது, அவர்களின் ஓட்டும் கிடைக்காது, இதுதான் உண்மை.

தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம்
அரசு ஊழியர்களுக்கு மட்டுமா துரோகம் செய்தார். துரோகம் பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம், பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து, பெண்களுக்கு துரோகம், குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று பாஜகவின் எல்லா சட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம் செய்தார். கட்சியில் அவரை வளர்த்துவிட்ட, செங்கோட்டையனுக்கு துரோகம், பதவி கொடுத்த சசிகலா, தினகரனுக்கும் துரோகம், ஓபிஎஸ்-க்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சட்டப்பேரவையின் தலைவர் தனபாலுக்கே சீட்டு கொடுக்காமல் துரோகம், எல்லாவற்றிற்கும் மேல், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவுக்கு, அதே பாஜக உடன் கூட்டணி வைத்து துரோகம். இப்போது நான் சொன்ன துரோகத்தை உங்களால் எண்ண முடிந்ததா? பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம். ஏற்கனவே பத்து, அடுத்தது 11.

ரூ.8,000 இல்லத்தரசி திட்டம்
பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால், அது நீதான் கட்டப்பா.” அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமி தான். இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த இபிஎஸ், பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? நம்முடைய தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாரை களத்தில் இறக்கிவிட்டு, பிரசாரத்தில் இறங்கியிருக்கிறேன். பெண்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவது மாதிரி ஒரு அல்டிமேட் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இல்லத்தரசி திட்டம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றித் தான் எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தான் சோகமாக இருக்கிறார். யார் அவர்? அவர் தான் இபிஎஸ்.

எங்கே ஊழலும், கமிஷனும் வந்தது?
இல்லத்தரசி திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு, “இதில் தி.மு.க.காரர்கள் கமிஷன் அடிப்பார்கள்” என்று அடிப்படையே இல்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். பணத்திற்கு பதிலாக கூப்பன் தருகிறோம். மக்கள் கடையில் கொடுத்து பொருள் வாங்கிக் கொள்ள போகிறார்கள். இதில் எங்கே ஊழலும், கமிஷனும் வந்தது? தன்னைப்போன்றே இபிஎஸ் எல்லோரையும் நினைத்துவிட்டார். எது எப்படியோ, இல்லத்தரசி அறிவிப்பால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இப்போது பியூஸ் போன சாமி ஆகிவிட்டார்

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?
நாம் இப்போது போராடுவது, திமுக வெற்றிக்காக மட்டுமல்ல; ஒரு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, விருதுநகர் மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved