Also Watch
Read this
பொய் வழக்கு மற்றும் சிறைக்கு அஞ்சமாட்டோம் என, திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ உடன் சந்திப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளும் சிறைக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:
பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதிதானது கிடையாது. ஏற்கெனவே எங்கள் கட்சித் தலைவர், இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திமுகவினர் இந்த சிறைக்கு வந்தால் பெருமையாகத் தான் கருதுவார்கள். அச்சுறுத்தல், பொய் வழக்கு, கைது போன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் திமுகவினர் அல்ல.

முதல்வருக்கு எதிரான பேசினால்...
எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அவற்றை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறிய நிலையிலும் அவர் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. ஆனால், முதலமைச்சரை தவறாக பேசினால் சிறையில் அடைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரையும் சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றது.

பா.ஜ.க.வைப் போலவே...
தமிழக வெற்றி கழகத்திற்கு ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லை. காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அடக்கவே முயற்சிக்கிறது. யார் விமர்சனம் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தமிழக வெற்றி கழகத்திற்கு இல்லை. யாருக்கு பயந்து அரசியல் செய்தார்களோ அதே நிலையில்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். பா.ஜ.க. பெயரை கூட சொல்லத் தயக்கம் காட்டுகிறார்கள். டெல்லியில் மாணவர்கள் போராட்டம் எப்படி கையாளப்படுகிறதோ, அதே போன்று தமிழகத்திலும் தமிழக வெற்றி கழகம் செயல்படுகிறது.

பாஜக உடன் கூட்டணியா?
திமுக தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. பா.ஜ.க. உடன் இணைகிறது என்ற வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எந்த காலத்திலும் அதிமுகவும், திமுகவும் அரசியல் ரீதியாக நெருங்கியதில்லை. ஆனால் தமிழக நலனுக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்தித்துள்ளோம். தமிழக பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது உறுதியான கருத்து. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பா.ஜ.க. வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு கனிமொழி தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved