Also Watch
Read this
அதிமுக பொதுச்செயலாளர் என்பதை மறந்து, திமுக பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் இபிஎஸ் என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை திமுக விமர்சித்தது போல், முதலமைச்சர் விஜயை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்யும் பிரேமலதாவை, விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தாராபுரம் இடைத்தேர்தல்
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை கூட திமுக முன்னெடுத்ததில்லை. தேர்தல் வரும்போது அவதூறுகளையும், ஆபாசங்களையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசமான பிரச்சாரங்களையும் உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர். இருந்தபோதும் திமுகவினர் இதுபோன்று தான் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர் இருந்தவரை எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது கிடையாது.

உதயநிதி பேச்சுக்கு கண்டனம்
ஜெயலலிதாவையும் கடுமையான வார்த்தைகளால், தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தற்போது, உதயநிதி ஸ்டாலின் பெண்களை நோக்கிய, தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கிய பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியை கூறி திமுக ஓட்டு கேட்டது கிடையாது. ஆபாசமான பேச்சுக்களை மக்களும், குறிப்பாக கொங்கு மண்டல மகளிரும் தூக்கி எறிவார்கள்.

இபிஎஸ் குறித்து விமர்சனம்
எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் விஜய் குறித்து தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி, திமுகவுடன் இணைந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று உள்ள அதிமுக, புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட அதிமுக கிடையாது. ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த அமைச்சர்கள் அனைவரும், தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டனர்.

ஜெயலலிதா இருந்தபோது 50 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கும், திமுக இங்கு வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது, தற்போது அவ்வாறு இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 50 தொகுதிகளில் வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமக இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அதிமுக புறக்கணிப்பு
தற்போது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் மட்டும் தான் இருக்கிறார்கள், மிதுன் அதிமுகவை வழி நடத்துவதால் தான் அங்கு இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் அனைவரும் வெளியேறினர்.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 25 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கொங்கு மண்டலத்தில் பெற்றது. மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள். அதிமுக சொத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி அவரது மகன் மிதுனைக் கொண்டு வருவதற்காக உதயநிதியுடன் திமுக, அதிமுக சேர்ந்தது.

முதல்வர் விஜய் பிரச்சாரம்
முதலமைச்சரின் பிரச்சாரமும் சுற்றுப்பயணமும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும், கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய தொழில் துறையினருக்கு மிகப்பெரிய திட்டங்களை வகுப்போம். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை செங்கோட்டையனின் இல்லத்தில் இருந்துதான் தொடங்கியது, ஆனால் அவரையே கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள்.

விஜயகாந்த் ஆன்மா...
விஜயகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்பதை பிரேமலதாவுக்கு நாங்கள் மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம், எந்தக் கட்சி விஜயகாந்தை தூக்கி
எறிந்ததோ, அந்தக் கட்சியுடனேயே பிரேமலதா இணைந்துள்ளார். இதனை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது. விஜயகாந்த் திமுகவிற்கு எதிராக என்ன பேசினாரோ, அவருடைய வழியில் மீண்டும் அதனை மக்களிடம் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved