Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 06:57 AM
By: Web Team
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 158ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், கூவம் ஆற்றில் இறங்கியும், சாக்கடையை கையில் அள்ளியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்துள்ள நிலையில் ஒரு பெண் தூய்மை பணியாளர்கள் கூவம் ஆற்றிலேயே மயங்கி விழுந்தார்.
வீசும் காற்றில் சாக்கடையின் வாடை வந்தாலே மூக்கை மூடிக்கொண்டு எட்டடி தூரம் தள்ளி ஓடும் மக்கள் மத்தியில், அந்த சாக்கடையில் இறங்கி, அதனை கையில் அள்ளி கையெடுத்து கும்பிட்டு, போராட எங்களுக்கென்ன ஆசையா? எங்களின் வயிற்றில் அடித்தால் நாங்களும் என்னதான் செய்வது? என்பதே இவர்களின் மனமுக்குமுறல்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகள் தனியாா் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
சென்னை ரிப்பன் மாளிகை, அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், தலைமை செயலகம் என போராடிய இடங்கள் தான் மாறியதே தவிர தீர்வு எட்டப்படவில்லை. அதேபோல், இவர்கள் மேல் கைது நடவடிக்கையும் பாய்ந்தது. இந்நிலையில், 158ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் தூய்மை பணியாளர்கள், எழும்பூர் கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கூவத்தில் இறங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராடிய பெண்கள் சாக்கடையை கையில் அள்ளி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
முழங்கால் அளவு சாக்கடை நீரில் பெண் தூய்மை பணியாளர்களும், மார்பளவுக்கு சாக்கடை நீரில் சில ஆண் தூய்மை பணியாளர்களும் நின்று அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோருக்கு எதிராக 2 மணிநேரத்திற்கும் மேலாக கோஷங்கள் எழுப்பினர். மேலும், கண்டா வரச்சொல்லுங்க கே.என்.நேருவை கையோடு கூட்டி வாருங்கள் என பாட்டும் பாடினர்.
இதனிடையே அவர்களை கைது வந்த காவல்துறையினர் மேலே வருமாறு அழைத்தனர். அதற்கு, வேண்டுமானால் கீழே இறங்கி வந்து கைது செய்து கொள்ளுங்கள் என தூய்மை பணியாளர்கள் விடாப்பிடியாக நின்றதால் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வந்து கைது செய்தனர். அப்போது, வசந்தி என்ற பெண் மயங்கி கீழே விழுந்தார்.
ஏற்கனவே, இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அம்பத்தூர் பகுதியில் உண்ணாவிரதத்தில் இருந்து வந்த வசந்தி தற்போது கூவத்திலும் இறங்கி போராடியதால் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. இதனிடையே கூவத்தில் இறங்கி போராடியவர்கள் மற்றும் அதற்கு வெளியேயும் போராடியவர்கள் என 300க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்து மற்றும் காவல் வாகனங்களில் ஏற்றிய போலீசார் மண்டபங்களில் அடைத்தனர்.
முன்னதாக, தங்கள் ஆதங்கத்தை கொட்டிய தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோர் போராட்டத்தில் குதித்தால் அவர்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுகிறது, நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம் என கேள்வி எழுப்பினர்.
மேலும், வெறும் ஐந்தே நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளுக்கே செவி சாய்யப்பட்டுள்ளது, ஆனால் 6 மாதங்களாக கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம் ஏறெடுத்து பார்க்க எந்த அதிகாரியும் இல்லை என கொந்தளித்த போராட்டக்காரர்கள், வாழவும் விடாமல் சாகவும் விடாமல் நடுத்தெருவில் நிற்க வைப்பது நியாயமா? என வருத்தம் தெரிவித்தனர்.
வீடு வேண்டும், பணம் வேண்டும், சோறு வேண்டுமென்றா கேட்கிறோம் வேலை தானே கேட்கிறோம் என நொந்துபேசிய பெண்கள், குப்பை அள்ளுவதை விட்டால் வேறு எந்த வேலையும் தங்களுக்கு தெரியாது எனக்கூறினர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் ரேவதி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved