Also Watch
Read this
சென்னையில், இல்லத்தரசிகளை குறிவைத்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையகரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை
சென்னை பெரம்பூர், திரு.வி.க.நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மைதிலி, வாணி, சுகந்தி உள்ளிட்ட 9 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்த சாந்தி, ஹரிணி மற்றும் திமுக உறுப்பினரான கனிமொழி ஆகியோர் சேர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து 5 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியது அம்பலமானது.

நடவடிக்கை எடுக்கவில்லை
சென்னை கோயம்பேட்டில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதோடு, கொடுத்த பணத்திற்கு வட்டி கிடைக்கும் என்று ஆஃபர்களை அள்ளி வீசியதாக கூறப்படுகிறது.

இதனை நம்பி ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த ஏமாந்ததாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். மேலும் பணத்தை ஏமாற்றியவர்கள் மீது செம்பியம், மாதவரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார்கள் இருந்ததும் அவர்களுக்கு தெரியவந்தது.

முதல்வருக்கு கோரிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணத்தை திருப்பி கேட்டு வந்ததாகவும், முதலில் தருவதாக கூறி வந்தவர்கள், தற்போது, ’கொடுக்க முடியாது உங்களால் என்ன செய்ய முடியுமோ, பண்ணுங்க,’ என மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் பணத்தை ஏமாற்றியவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.