Also Watch
Read this
பெருமைமிகு அர்த்தம்கொண்ட தங்களின் ஊர் பெயரில், தேவையற்ற சாதி அடையாளத்தை பொருத்தி, தங்களை மீளா துயரத்திற்கு ஆளாக்கி விட்டதாக விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராம மக்கள் மனக்குமுறலை கொட்டி உள்ளனர். தங்களின் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என அதிகாரிகளை நோக்கி அரை நூற்றாண்டு காலமாக, வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் மக்கள் தவெக அரசாவது தங்கள் நெஞ்சில் பால் வார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊர்ப் பெயரால்...
சொத்து சுகம், மாடமாளிகை, கூடகோபுரம், பணங்காசு... இவற்றிற்காகவா அரை நூற்றாண்டு காலம் போராடிக் கொண்டிருக்கிறோம்? நித்தமும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் தங்கள் ஊர் பெயரை பழையபடி மாற்றித்தர வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை.

வடக்கு அச்சம் தவிர்த்தான்...
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களுக்கு மேல் தீண்டாமைக் கொடுமை இருப்பதாகவே புள்ளி விவரங்கள் கூறுகிறது. அப்படி ஒரு கொடுமையில் சிக்கி தவிப்பதுதான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடக்கு அச்சம் தவிர்த்தான் கிராமம்.

பண்டைய காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாழ்ந்த போர் வீரர்கள், முதன்முதலாக போருக்கு செல்லும் முன்பு, வடக்கு அச்சம் தவிர்த்தான் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்த வீரர்களின் ஆசியை வாங்கி போர் பயம் நீங்க பெற்றதாகவும், அதனால் தான் "அச்சம் தவிர்த்தான்" என பெயர் வந்ததாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் பயத்தை போக்கியவன் என்ற பெருமைமிகு அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஊர், தற்போது சமூக அடையாளத்துடன் ஒடுக்கப்பட்டிருப்பது தான் வேதனையே.

தீராத மன உளைச்சலில்...
ஆதி திராவிட மக்கள் வாழும் பகுதி என்பதால், பறைச்சேரி என ஆரம்பகாலட்டத்தில் வாயளவில் கூறிய அதிகாரிகள் கடைசியில் அரசு ஆவணங்களிலும் அப்படியே எழுத அதுவே ஊர் பெயராகியது. வடக்கு அச்சம்தவிர்த்தான் என்ற பெயரே நாளடைவில் மழுங்கியது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக தீராத மன உளைச்சலில் இருப்பது அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களைவிட அங்குள்ள பள்ளி மாணவர்கள் தான்.

ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அத்தனை அரசு ஆவணங்களிலும் பறைச்சேரி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தங்கள் ஊர் பெயரை மாற்றித்தருமாறு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை எனக்கூறும் ஊர் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

எதிர்ப்பார்ப்பில் கிராம மக்கள்
தங்கள் ஊர் பெயரை அரசு ஆவணங்களில் வடக்கு அச்சம் தவிர்த்தான் என குறிப்பிடப்பட வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசுதான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரை பட்டியலினம் அல்லாத ஒருவர் சாதிப்பெயரை சொல்லி அழைத்தால் அவர் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயும். அதனால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, ஒரு ஊரையே சாதி அடையாளத்துடன் மட்டுப்படுத்தி அழைப்பது எப்படி எந்தவகையில் சரியாகும்? அதற்கு என்ன தண்டனை? யார் மீது வழக்குப் பதிவு செய்யலாம்? என்பதே பலரது கேள்வி.