Also Watch
Read this
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், 10ஆம் வகுப்பு மாணவனை சக நண்பர்களே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி சென்ற மாணவர்
சிவகங்கை மாவட்டம், காரையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது 14 வயது மகன் அஸ்வின், அதே பகுதியில் உள்ள கோவிலான்பட்டி அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் முதல் நாளான வியாழக்கிழமை, அஸ்வின் வழக்கம் போல பள்ளிக்கு சென்றிருக்கிறார். ஆனால், மாலை வீடு திரும்பியிருக்க வேண்டிய அஸ்வின், வீடு வந்து சேரவில்லை. அதனால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

மது குடித்த நண்பர்கள்
வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வினை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஸ்வின் பள்ளி முடிந்ததும், தனது மூன்று நண்பர்களான அஜய், 20 வயதான கணேசன், மாடுபிடி வீரரான அரவிந்துடன் சேர்ந்து, கீழக்காவனூர் கண்மாய் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு, மது போதையில் அவர்கள் நால்வரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அஸ்வின் பைக்கிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.

ஆவேசம், விபரீதம்
கீழே விழுந்த அஸ்வின், தனது நண்பர்கள் மூவரையும் பார்த்து ஆவேசத்துடன், உங்களால் தான் நான் மது குடிக்க நேர்ந்தது, இந்த விவரத்தை இப்போதே தனது பெற்றோரிடம் சொல்லப்போவதாக அஸ்வின் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூவரும், அஸ்வின் உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற பயத்தில், அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இந்த தகராறு முற்றிய நிலையில், மூவரும் சேர்ந்து, அஸ்வினை கொடூரமாக தாக்கியதோடு, அஸ்வினின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.

கூடா நட்பு கேடாய் முடியும்
சம்பவம் நடந்த இடத்திலேயே அஸ்வினின் சடலத்தை வீசிவிட்டு, மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல் அப்பகுதிக்கு சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் அஸ்வினின் உடல் கிடப்பதை கண்டு அலறியடித்துக்கொண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவனின் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தையும், அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளையும் ஒவ்வொரு பெற்றோரும் கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved