Also Watch
Read this
இன்ஸ்டாகிராம் தோழியை சந்திப்பதற்காக சென்னை வந்த 18 வயது சிறுமி, அந்த தோழி மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, தனியார் பாருக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்த நிலையில், அங்கு மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 21 வயது பூர்த்தியானதை போல் போலியாக தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டையை ஆதாரமாக காண்பித்து பாருக்கு சென்ற சிறுமி, கேடாய் வந்த கூடா நட்பால் பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

சென்னைக்கு வந்த சிறுமி
சிறுவர், சிறுமியர் தங்களது வயதுக்கென்று உள்ள வரம்பை மீறி நடந்து கொண்டால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு மற்றொரு உதாரணமாய் அமைந்திருக்கிறது, சென்னை கோயம்பேட்டில் நடந்த இந்த சம்பவம்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் மேரி ஸ்டெல்லா என்பவரது இளைய மகள் யான்சி. 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்த யான்சிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த மற்றொரு சிறுமியான பவுசி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 19ஆம் தேதி பவுசியை பார்ப்பதற்காக, விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த யான்சி, தோழி வீட்டிலேயே தங்கி நட்பை வளர்த்துள்ளார்.

மது பாருக்கு சென்ற சிறுமிகள்
இந்நிலையில் தான் கடந்த 30ஆம் தேதி அன்று திரைப்படம் பார்க்க சென்ற தோழிகள் இருவரும், தாமதமாக வீடு திரும்பியதால் தாய் கண்டிக்கவே மீண்டும் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்களான ஹர்சத், சரண் ஆகியோருடன் சேர்ந்து இரு சிறுமிகளும், கோயம்பேட்டில் உள்ள சென்னை கேட்வே ஹோட்டலில் இயங்கி வரும் ignite பாருக்கு சென்றுள்ளனர்.

போலி ஆதார் அட்டை
21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே பாருக்குள் அனுமதி என்பதால், அங்கு வாயிலில் இருந்த பவுன்சர்கள் சிறுமிகள் உள்ளிட்ட நண்பர்கள் குழுவின் ஆதார் கார்டுகளை சோதனை செய்தனர்.இதனை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்த சிறுமிகள் இருவரும், 2004ஆம் ஆண்டு பிறந்ததை போல ஏஐ மூலம் போலியான ஆதார் கார்டை வடிவமைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதனை வாங்கி பார்த்த பவுன்சர்களும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நினைத்து பாருக்குள் அனுமதித்துள்ளனர்.

மது பாருக்குள் மோதல்
உள்ளே சென்ற சிறுமிகள், மது அருந்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து பப்பில் நடனமாடிய போது, மற்றொரு கும்பல் சிறுமிகளிடம் வம்பிழுக்கவே வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து இரு தரப்பையுமே பார் ஊழியர்களும், பவுன்சர்களும் சேர்ந்து வெளியேற்றினர். தொடர்ந்து பார்க்கிங் பகுதியில் மீண்டும் மோதலில் ஈடுபட்டவர்களை, பவுன்சர்கள் ஹோட்டல் வளாகத்தை விட்டே வெளியேற்றினர்.

சம்பவ இடத்திலேயே பலி
இதையடுத்து, சிறுமிகளை வீட்டில் விடுவதற்காக இரவு 11.30 மணியளவில், நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். நால்வரும் கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்ற போது, அவர்களுடன் பப்பில் தகராறில் ஈடுபட்டவர்கள் நின்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பார்த்து அடையாளம் கண்டு கொண்ட அந்த கும்பல், தங்களிடம் தகராறில் ஈடுபட்டவர்களை விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் விரட்டிச் சென்றது. அது மட்டுமின்றி இருசக்கர வாகனத்தின் மீது இரு முறை அதிவேகமாக காரைக் கொண்டு மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய நால்வரும் தூக்கி வீசப்பட்டதில், யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை, கைது
கொலை வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்திய திமுக கொடி கட்டிய காரில் இருந்த பாலகுரு என்பவரை கைது செய்தனர். கொலை செய்யும் நோக்கத்துடன் காரை இயக்கி இருசக்கர வாகனத்தை மோதிய சுமன் சக்திவேல் என்பவர் உள்பட மேலும் 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க 21 வயது பூர்த்தியாகாத சிறுமிகளை பாருக்குள் அனுமதித்ததாகவும், அவர்களுக்கு மது விற்பனை செய்ததாகவும் கூறி, பாரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கியிருக்கின்றனர் கலால்துறை அதிகாரிகள்.

படுகாயமடைந்த தோழியும் பலி
ஏஐ மூலம் போலி ஆதார் அட்டை தயாரித்து அதனை அடையாளமாக காட்டிய சிறுமிகளை, பவுன்சர்கள் சோதித்து, அந்த அடையாள அட்டை உண்மையானது என்று நம்பியே உள்ளே அனுமதித்துள்ளனர். தகராறு ஏற்பட்டதுமே சுதாரித்த பார் ஊழியர்கள், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக உடனடியாக இரு தரப்பையுமே வெளியேற்றியும் இருக்கின்றனர். ஆனாலும் விடாமல் விரட்டிச் சென்று, பாரில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு அப்பால் ஆத்திரத்தை தீர்த்திருக்கிறது காரில் வந்த கும்பல். உண்மை இப்படி இருக்க பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பார் உரிமையாளர் ஆதங்கம் தெரிவித்தார்.
இந்நிலையில், கார் மோதியதில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யான்சியின் தோழி பவுசியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.