Also Watch
Read this
By: Manigandan Raja

விவசாயிகளை கைது செய்த போலீசார் :
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 68 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 6165 விவசாயிகளுக்கு கடந்த 2024–2025 நிதியாண்டிற்கான வறட்சி நிவாரணமாக சுமார் ரூ 7 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட வேண்டிய நிலையில்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக வறட்சி நிவாரணம் கேட்டு போராடிவரும் நிலையில் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனைக் கண்டித்து தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் இன்று நரிக்குடி வேளாண்மைத் துறை அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாயிகள் திருச்சுழி - இராமேஸ்வரம் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, “வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்”, “விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் விவசாயிகளின் இந்த சாலை மறியல் காரணமாக நரிக்குடி பகுதியில் பரபரப்பு நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved