Also Watch
Read this
திருச்சி மாவட்ட தவெகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல் நிலவுவதாகவும், உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி எழுந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே உட்கட்சி பூசல் வெடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாவட்டச் செயலாளர்களின் அதிகார வரம்பு மற்றும் முக்கிய நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களின் பின்னணி என்ன?

மலைக்கோட்டை மாநகரில்...
மலைக்கோட்டை மாநகரமான திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் தவெக வெற்றி பெற்று வாகை சூடியது. திருச்சி கிழக்கில் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் போட்டியிட்டது, 6 தொகுதிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும், எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததன் மூலம், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற கட்சியில் உள்ள பல தலைகள் காய் நகர்த்தி வருகிறார்களாம்.
இது ஒருபுறம் இருக்க, திருச்சி மாவட்ட தவெகவில் நிலவிவரும் உட்கட்சி பூசலைதான் எதிர்தரப்பில் உள்ள கட்சிகள் இப்போது ஹைலைட்டாக பார்த்து வருகிறார்களாம்.

திருவெறும்பூர் தவெக மாவட்டச் செயலாளர் மாற்றம்
திருச்சி, திருவெறும்பூர் தொகுதி தவெக மாவட்டச் செயலாளராக அருள்விஜய் இருந்து வந்த நிலையில், அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ.வுக்கு மாவட்டச் செயலாளர் என்ற புரமோசனையும் வழங்கியது கட்சித் தலைமை. மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனதால் விரக்தி அடைந்த அருள்விஜய் தனி கோஷ்டியை உருவாக்கி கொண்டு, நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வேலைகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல, நவல்பட்டு விஜியும், தாம் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு கட்சி பொறுப்புகளை வாரி வழங்குவதாக அருள்விஜய் தரப்பு பொரிந்து தள்ளுகிறதாம்.

தொகுதி பொறுப்பாளர் சவுக்கத் - வெல்லமண்டி நடராஜன் மோதல்?
திருவெறும்பூர் தொகுதி தான் இப்படி என்றால், முதலமைச்சர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியிலும் கோஷ்டி பூசலுக்கு அளவே இல்லையாம். தொகுதி பொறுப்பாளராக சவுக்கத் இருந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவரது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தது கலக்கத்தை ஏற்படுத்த திருச்சி கிழக்கு பொறுப்பாளர் சவுக்கத் தனித்து செயல்படுகிறாராம்.

துணை சபாநாயகர் ரவிசங்கர்- கு.ப.கிருஷ்ணன் உரசல்?
திருச்சி துறையூர் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கும், மாற்று கட்சியில் இருந்து வந்த கு.ப.கிருஷ்ணனுக்கும் கட்சியில் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறதாம். அண்மையில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சமயபுரம் பகுதியில் மருத்துவ முகாமை கிராண்டாக நடத்திய கு.ப.கிருஷ்ணன், அதற்காக வைத்த வரவேற்பு பேனரில் மணச்சநல்லூர் மாவட்ட செயலாளரான துணை சபாநாயகர் ரவிசங்கரின் புகைப்படம் இடம் பெறவில்லையாம்.

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமேஷ் சமாளிப்பாரா?
அதேநேரத்தில், அந்த பேனரில் லால்குடி சட்டமன்ற தொகுதி மாவட்டச் செயலாளரான முசிறி தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் மற்றும் மண்ணச்சநல்லூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரவணன் ஆகியோரது புகைப்படங்கள் மற்றும் கு.ப.கிருஷ்ணனின் ஆதரவாளர்கள் புகைப்படங்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தது, தவெகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டு காட்டியதாக தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கூட்டப்படுவது எப்போது?
திருச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருவரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் ரமேஷ், மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என நிர்வாகிகளை கட்சித் தலைமை நியமித்துள்ள போதும், அவர்களை ஒருங்கிணைத்து செல்வது தொடர்பாகவோ, கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி அழைத்து செல்வது தொடர்பாக இதுவரை எந்த ஆலோசனை கூட்டங்களையும் நடத்தவில்லை என்று கட்சி நிர்வாகிகள் ஆதங்கப்பட்டு வருகிறார்களாம்.

வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் மோதல்?
திருச்சி தவெகவில் கோஷ்டிகள் பெருகியபோதும், அவர்களை அரவணைத்து செல்ல அமைச்சர் ரமேஷ் நினைத்தாலும், அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்களான வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், ஓரிரு நாளுக்கு முன்பு கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, துணை மேயர் சீனிவாசன் என பலரும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தட்டிப் பறிப்பதிலேயே குறியாக இருப்பதாக தவெக தொண்டர்கள் புலம்புகிறார்களாம்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் சீட்டை கைப்பற்ற போட்டி?
அறநிலையத்துறையில் அதிரிபுதிரியாக செயல்பட்டு வரும் அமைச்சர் ரமேஷ், உட்கட்சி பூசலை சமாளித்து கட்சியை வளர்த்தெடுப்பாரா? என்பதே தவெகவில் ரசிகனாக, தொண்டனாக பயணித்து வரும் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.