Also Watch
Read this
அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களின் முக்கிய தூண்களான சி.விஜயபாஸ்கரும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தங்களது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். இபிஎஸ் தரப்பை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, மாமல்லபுரத்தை அதிரவைத்த இந்த மெகா என்ட்ரிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன?

தேர்தல் தோல்விக்கு பிறகு...
ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆனால், சிறுக சிறுகக் கழன்று கொண்டிருந்த எடப்பாடியாரின் கோட்டையோ, இந்த ஆடி மாதத் தொடக்கத்தில் மொத்தமாக பறந்துகொண்டிருக்கிறது.
தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் பலரும், தலைமை மீது கடுமையான அப்செட்டில் இருந்தனர். கரன்சி பலம் இருந்தாலும், கட்டளையிட சரியான ஆள் இல்லை என்கிற குமுறல், அதிமுகவில் புகைந்து கொண்டே இருந்தது.

இதன் உச்சகட்டமாக, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இதனால், சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 41 ஆக தடாலடியாக குறைந்து போனது. இதுவே இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை வரவைத்த நிலையில், மீதமிருந்த டபுள் விஜயபாஸ்கர்களின் மூவ் என்னவாக இருக்கும் என்பதுதான் கடந்த சில நாட்களாக அறிவாலயம் முதல் கிரீன்வேஸ் சாலை வரை ஓடிய ஹாட் டாபிக்.

விஜய பாஸ்கர்கள்...
அந்த சஸ்பென்ஸை உடைக்கும் விதமாக தான் சென்னை அடுத்த மாமல்லபுரம் தனியார் விடுதியில் இணைப்பு விழா அரங்கேறியது. மாமல்லபுரமே திணறும் அளவுக்கு புதுக்கோட்டை மற்றும் கரூரிலிருந்து 200 பஸ்கள், கார்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை திரட்டி வந்து, தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர்களோடு முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோரும் தவெக கூடாரத்திற்குள் நுழைந்து இபிஎஸ்ஸுக்கு டாட்டா காட்டியுள்ளனர்.

இபிஎஸ் தரப்புக்கு இன்று டாப் கியர் போட்டு எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் இரு விஜயபாஸ்கர்கள். கட்சித் துண்டை தோளில் ஏந்திய கையோடு மைக் பிடித்த விராலிமலை சி.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி தரப்பை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி அனல் பறக்க பேசினார். நாங்க தவெக-வோடு கூட்டணி வைக்க சொன்னோம். ஆனால், தலைமை அதை கேட்காமல், தீய சக்தி திமுக உடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி ஸ்கெட்ச் போட்டது சரியா? உழைக்கிற தொண்டனை எதிரியாக பார்த்தால் இப்படித்தான் நடக்கும் என பொங்கினார்.

டெல்டாவில் மாபெரும் விழா
அத்தோடு நிறுத்தாமல், கடைசியாக அவர் போட்ட அந்த வெடிதான் இப்போது டெல்டா மாவட்ட அதிமுக புள்ளிகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. இன்னைக்கு மாமல்லபுரத்துல நீங்க பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான், தலைமை பச்சை கொடி காட்டினால், டெல்டாவில் நாங்கள் நடத்த போறதுதான் மெயின் பிக்சர் என்றும், அங்கே மாபெரும் இணைப்பு விழாவை நடத்தி காட்டுகிறோம் என்று எடப்பாடி தரப்பை அதிர வைக்கும் வகையில் பஞ்ச் டயலாக்குகளை பறக்கவிட்டார்.

அக்மார்க் அறிகுறி
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து சீனியர் விக்கெட்டுகள் தவெகவுக்குள் விழுந்து கொண்டிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பை நிலைகுலைய வைத்திருக்கிறது. இது வெறும் ட்ரெய்லர் தான், டெல்டாவில் தான் மெயின் பிக்சர் என சி.விஜயபாஸ்கர் கொடுத்திருக்கும் ஓப்பனிங் ஸ்டேட்மெண்ட், அடுத்தபடியாக டெல்டா மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளையும் தவெக இழுக்க போகிறது என்பதற்கான அக்மார்க் அறிகுறி.

தவெக சென்றது ஏன்?
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சி.விஜயபாஸ்கர், தவெகவில் தாங்கள் இணைந்தது பதவி ஆசைக்காக அல்ல என்றும், ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் தாராளமாக திமுகவிற்கே சென்றிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக பழைய தலைமையின் செயல்பாடுகள் மீது ஏற்பட்ட கடுமையான வெறுப்பின் காரணமாகவே, அக்கட்சியிலிருந்து விலகி பலரும் தற்போது தவெக-வில் இணைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இனி, ஒரே குடும்பம்
கட்சியில் இணைந்த கையோடு, நேராக டைனிங் ஹாலுக்குள் நுழைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெகவின் முக்கிய புள்ளிகளுடன் நெருக்கமாக அமர்ந்து பிரியாணியை சுவைக்க தொடங்கினர்.

இலை மாறி வந்தவர்களுக்கு, இலையில் வஞ்சனையின்றி பிரியாணியை பரிமாற, அந்த அசைவ உபசரிப்பும், இருதரப்பும் காட்டிய அந்த கெமிஸ்ட்ரியும், நாம் இனி ஒரே குடும்பம் என்பதை அங்கே கூடியிருந்த பிற நிர்வாகிகளுக்கு உணர்த்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved