Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுதன் (28). கட்டிடத் தொழிலாளியான இவர், இன்று காலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாப்பாக்குடி காவல்துறையினர், திடீரென சுதனை வீட்டிற்குள்ளிருந்து எந்தவித காரணமும் கூறாமல் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
தன் மகனை போலீசார் அழைத்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் முத்துலட்சுமி, போலீசாரைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் முத்துலட்சுமியை மிகவும் அவதூறாகப்
பேசியதுடன், "உன் மகன் மீது பொய் வழக்கு போட்டு விடுவோம்" என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முத்துலட்சுமி பதற்றத்துடன் பாப்பாக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்தபோது, "உங்கள் மகன் இங்கு வரவில்லை" என்று போலீசார் அலட்சியமாகப் பதிலளித்ததாகத் தெரிகிறது. இதனால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்று அஞ்சிய முத்துலட்சுமி, இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
அதில், தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்றும், அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இது குறித்து பாப்பாக்குடி காவல்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சுதன் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதன்காரணமாக, அவர் இனிமேல் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என வட்டாட்சியர் (தாசில்தார்) முன்னிலையில் 6 மாத காலத்திற்கான நன்னடத்தை பிணைப் பத்திரம் (Bond) எழுதித் தர வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தினோம்.
ஆனால், நீண்ட நாட்களாக சுதன் காவல் நிலையத்திற்கு வரவில்லை. எனவே, இன்று அவரது வீட்டிற்குச் சென்று அழைத்து வந்தோம்" எனத் தெரிவித்தனர். காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், ஒருவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதும், அவரது தாயை மிரட்டியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.