news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பேச்சு, பேரம், மிரட்டல், 9 பேர் அரெஸ்ட், அடுத்து சிக்கப்போவது செந்தில் பாலாஜியா?
tv

Also Watch

tv

Read this

பேச்சு, பேரம், மிரட்டல், 9 பேர் அரெஸ்ட், அடுத்து சிக்கப்போவது செந்தில் பாலாஜியா?

தொடரும் கைது நடவடிக்கை

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியை சேர்ந்த ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியும் படியாததால், கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரில் 3 பேரை கைது செய்து புழல் சிறையில் தள்ளிய காவல்துறை, அடுத்ததாக பத்திரிகையாளர் உள்ளிட்ட 6 பேரை கூண்டோடு கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரை கண்ணில் விளக்கெண்ணெய்விட்டு தேடிவரும் போலீசார் செந்தில் பாலாஜியையும் விரைவில் கைது செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

தவெக எம்எல்ஏ புகாரால்...
2026 சட்டமன்ற தேர்தலை, தேர்தலுக்கு முன் - தேர்தலுக்குப்பின் என பிரித்து பார்க்கும் அளவிற்கு அரசியல் களமே டோட்டலாக மாறிவிட்டது. தவெக என்ட்ரிக்கு முன்புவரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த அதிமுகவின் நிலையோ அக்கு அக்காக பிரிந்து அந்தரத்தில் பறக்கும் நிலையில் உள்ளது. அதேபோல், கடந்த தேர்தல்களில் திமுக உடன் ஒட்டி உறவாடிய தோழமை கட்சிகளும், வெளியில் இருந்துதான் ஆதரவு என வாய்நிறைய கூறிவிட்டு கடைசியில் இனி தவெகவோடு தான் கூட்டணி என குண்டை தூக்கிப்போட்டு விட்டது. கேம் சேஞ்சர் போன்று தவெக பிரவேசம் ஒட்டுமொத்த அரசியல் ஆணிவேரையே அசைத்துவிட்டது.

இது ஒருபுறம் இருந்தாலும் தவெக ஆட்சியை கவிழ்க்க திமுகவும், அதிமுகவும் தகிடுதத்த வேலை செய்து வருவதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், அவர்களது குற்றச்சாட்டு உண்மைதானோ? என சந்தேகிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா வாட்ஸ்அப் கால் ஹிஸ்ட்ரி, ஸ்க்ரீன்ஷாட் ஆகியவற்றுடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

தொலைபேசியில் பேரம்
அந்த புகார் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பற்றி எரியும் பெருந்தூபமே. பிரபல யூடிபரும், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் IPDS அமைப்பை சேர்ந்தவருமான திருநாவுக்கரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை செல்போனில் அழைத்து பேச முயன்றதாக தனது புகாரில் கூறியுள்ள எம்எல்ஏ இளையராஜா, தான் பிஸியாக இருக்கிறேன் எனக்கூறியும் விடாமல் போன் செய்ததோடு, வாட்ஸ்அப் காலிலும் அழைத்ததாக கூறியுள்ளார்.

ஒருகட்டத்தில் அழைப்பை ஏற்ற தன்னிடம், நீங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள், ஆனால், இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது, நான் சொல்வதை கேட்டால் உங்களுக்கும் லாபம், எனக்கும் லாபம், ஏற்கெனவே ஒரு செய்தியாளர் உங்களிடம் பேச முயற்சித்தபோது நீங்கள் பிடி கொடுக்காமல் நகர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன், அதனால்தான் நானே பேசுகிறேன் என்று பீடிகை போட்டதாக தெரிவித்துள்ளார்.

பேரம், வலியுறுத்தல், மிரட்டல்...
அதன் பிறகுதான் விஷயத்திற்கே வந்த திருநாவுக்கரசு, சபாநாயகர் மீதான தீர்மானத்தின்போது நான் சொல்வதுபோல் நடந்து கொண்டால் மட்டும் போதும், அதற்காக 35 கோடிகளை தருவதாக பேரம் பேசியதாக கூறி இருக்கிறார் இளையராஜா. அதில், தனக்கு உடன்பாடு இல்லையெனக் கூறியபோதும் விடாமல் மூளையை கழுவிய திருநாவுக்கரசு, நீங்கள் ஓ.கே. என தலையாட்டினால் போதும் குறிப்பிட்ட அந்த முக்கிய கட்சியின் சார்பாக நரேஷ், கிருஷ்ணன், அசோக் குமார் உங்களை நேரில் வந்து பார்ப்பார்கள், அவர்களே அனைத்து டீலிங்கையும் பார்த்துக் கொள்வார்கள் என கூறி இருக்கிறார்.

அதற்கு, தனக்கு விருப்பமில்லை, இனிமேல் அழைக்க வேண்டாம் எனக்கூறியபோது நீங்கள் நினைத்தாலும் இவ்வளவு பெரிய தொகையை ஒரே சேர பார்க்க முடியாது, அதற்கான ஆப்ஷனும் உங்களுக்கு இல்லை எனக்கூறிய திருநாவுக்கரசு, என்றைக்கு இருந்தாலும் எங்கள் தயவில்தான் நீங்கள் இருக்க வேண்டும், நீங்களும் உங்கள் குடும்பமும் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் சொல்வதை கேளுங்கள், இல்லாவிட்டால் பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறியதோடு தான் பேசிய விவகாரம் வெளியில் கசிந்தால் உன் உடலில் உயிர் இருக்காது என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்ததாக தனது புகாரில் கூறி இருந்தார் இளையராஜா.

தொடரும் கைது நடவடிக்கை
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியது உண்மைதான் என்பதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் FIR-ல் சேர்க்கப்பட்டன.

இதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தற்போதுவரை காக்கிகளின் கண்ணில் சிக்காத நிலையில் சென்னையை சேர்ந்த செல்வன், நாடார் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் ஸ்ரீநிவாசன், அஸ்தினாபுரம் ராஜேஷ், கரூரை சேர்ந்த அதிபன் ரமேஷ், சக்தி மெஸ் கார்த்திக், நாமக்கல்லை சேர்ந்த மற்றொரு அசோக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்
இதில், அதிபன் ரமேஷ், கார்த்திக் ஆகிய இருவரும் செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவர்கள். கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டு நடந்த அமலாக்கத்துறை சோதனையின்போது இவர்கள் வீட்டிலும் சோதனை நடந்தது. அதேபோல், செந்தில் பாலாஜி மின்சாரம் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசு மதுபான பார் டெண்டர் சான்றிதழ் வழங்குவது போன்ற பல்வேறு பணிகள் இந்த இருவரது பரிந்துரையின்பேரிலேயே நடைபெற்றதாகவும்,

இவர்களை வைத்துதான் கரூர் கம்பெனி என்ற பெயரே உருவானதாகவும் கூறப்படுகிறது. கரூர்-கோவை சாலையில் சக்தி மெஸ் என்ற பெயரில் கார்த்திக் உணவகம் நடத்தி வரும் நிலையில் பைனான்ஸ் செய்து வரும் அதிபன் ரமேஷ், ஜிம் ஒன்றையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவைகள் பெயருக்கு இருந்தாலும் இந்த இருவரின் முக்கிய அஜெண்டாவே செந்தில் பாலாஜியை வைத்து காரியங்களை சாதிப்பதும், அவருக்கான காரியங்களை கச்சிதமாக செய்து கொடுப்பதும்தான் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறையுமே சோதனை மேற்கொண்டதாம்.

கண் கலங்கிய மனைவி
அதேபோல், பேரம் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்தினாபுரம் ராஜேஷ், "தினமுகம்" என்ற மாத இதழ் நடத்தி வருபவர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்தான். இவர்தான் எம்எல்ஏ இளையராஜாவை 2 முறை தொடர்பு கொண்டு IPDS திருநாவுக்கரசுக்காக பேசியது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, அதிபன் ரமேஷை போலீசார் கைது செய்தபோது எதற்காக தனது கணவரை கைது செய்தீர்கள்? அவரை பார்த்துப்பேச பத்து நிமிடம் மட்டும் அனுமதி தாருங்கள் என அவரது மனைவி அதிகாரிகளிடம் கண்கலங்கியபடி கெஞ்சினார்.

செந்தில்பாலாஜியும் கைது?
இதுஒருபுறமிருக்க, பேரம் பேசிய விவகாரத்தில் சைலண்ட் மெயின் புள்ளியே செந்தில் பாலாஜிதான் என்று கூறப்படும் நிலையில், அவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யும் கையோடு அவரையும் சேர்த்து கைது செய்வது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில் தற்போதுவரை நவகிரஹங்கள் போன்று 9 பேர் சிக்கி உள்ள நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்கப் போகிறார்களோ? யார் யாரின் குட்டு வெளிப்படப் போகிறதோ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Link
கைதாகிறார் செந்தில்பாலாஜி? கிங் மேக்கரா? அரசியல் பேரிடரா?

கைதாகிறார் செந்தில்பாலாஜி? கிங் மேக்கரா? அரசியல் பேரிடரா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவில் இணைந்த டபுள் விஜயபாஸ்கர், அரசியல் பின்னணி அதிமுக காலி?

9
33 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau