news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கைதாகிறார் செந்தில்பாலாஜி? கிங் மேக்கரா? அரசியல் பேரிடரா?
tv

Also Watch

tv

Read this

கைதாகிறார் செந்தில்பாலாஜி? கிங் மேக்கரா? அரசியல் பேரிடரா?

ஊழலின் ஊற்றுக்கண் to செயல்வீரர்

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2016ல் ஊழலின் ஊற்றுக்கண் செந்தில் பாலாஜி என்று முழங்கிய திமுக மேடைகள், 2021ல் அவர் ஒரு செயல்வீரர் என்று முழங்கிய விசித்திரத்தை தமிழகம் கண்டது. கரூர் மண்ணில் ஒரு சாதாரண இளைஞனாகத் தொடங்கி, அதிமுக, திமுக என இரு பெரும் திராவிடக் கட்சிகளிலும் 'பவர்ஃபுல்' அமைச்சராக வலம் வந்தவர். இன்று சிறைவாசம், பதவி பறிப்பு எனச் சரிவைச் சந்தித்தாலும், தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே இருக்கிறார். செந்தில் பாலாஜி எனும் அரசியல் கிங் மேக்கரின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு செய்தி தொகுப்பு...

கரூர் மாவட்டத்தில் 21 வயதிலேயே...
1975, அக்டோபர் 21ஆம் தேதியன்று கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த செந்தில் பாலாஜி, 21 வயதிலேயே அரசியலில் இறங்கி அவர், வைகோவின் மறுமலர்ச்சி திமுக மூலம் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், திமுகவில் இணைந்து 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலராக ஆனதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு பின் 2000ல் திமுகவிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

முதன்முறையாக எம்எல்ஏ
2006ஆ ஆண்டு,கரூர் தொகுதியில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ல் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பேற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கரூரில் வெற்றி பெற்ற அவருக்கு, முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நியமனம் வழங்குவதாகக் கூறி பணம் பெறப்பட்டதாக 2014–2015ல் புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் அடிப்படையில் முதல் வழக்குப் பதிவு நடந்தது. அப்போது அந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 81 பேரிடம் பணம் பெறப்பட்டதாக பின்னர் புகார் எழுந்தது.

டி.டி.வி.தினகரன் அணியில்...
இவை அனைத்தும் இந்தக் கட்டத்தில் புகார்களின் அடிப்படையில் மட்டும் FIR பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2015 ஜூலை 27ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், ஜெயலலிதாவிடம் செல்வாக்கை இழந்ததால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. 2016ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் பிரிவை ஆதரித்தார். முதல்வரை மாற்றுமாறு ஆளுநருக்கு மனு அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, 2017 செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

திமுகவில் செந்தில்பாலாஜி
பின்னர், 2018 டிசம்பர் 14ல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வெற்றி பெற்றார். இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்த காலத்தில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததையும் நினைவு கூர்வது அவசியமாகிறது. அதிமுக அரசில் 15 முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜி மட்டும் பதவியில் தொடர்ந்தது குறித்தும், ஜெயலலிதா சிறையில் இருந்தபோது முதல்வர் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றது குறித்தும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கடுமை காட்டியிருந்தார். செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் மாவட்டத்தை கொள்ளையடித்து கட்டுப்படுத்துவதாகவும், ஊழல், கடத்தல், பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளையும் கூட முன்வைத்திருந்தார்.

ஏன் இந்த மாற்றம்?
திமுகவில் இணைந்த பிறகு, செந்தில் பாலாஜி 2021ல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு, ஏன் இந்த மாற்றம்? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் பலமுறை எழுப்பியுள்ளனர். இதற்கு திமுக தரப்பில், அவரது தொகுதி வளர்ச்சி, அமைப்புத் திறமை மற்றும் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்திய பங்களிப்பு ஆகியவற்றை காரணமாகக் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு, 2023 வரை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல கட்டங்களைக் கடந்து வந்தது. 2021 மார்ச்சில், சென்னை காவல்துறை சிசிபி பிரிவு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 46 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 2015ல் நியமன பட்டியல்கள் தகுதி அடிப்படையில் அல்லாமல் வேறு பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக காவல்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முதல் குற்றம் சாட்டப்பட்டவராக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை சோதனை
2023 ஜூன் 13ஆம் தேதி, செந்தில் பாலாஜி இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நீண்ட நேர விசாரணைக்குப் பின் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் கைதுக்குப் பின் நெஞ்சு வலி என கூறியதால், அவர் ஓமந்துரார் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கைது நாளன்று கடுமையான கரோனரி நோய்க்குறி ஏற்பட்டதாக அமலாக்கத்துறையிடம் மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இலாகா இல்லாத அமைச்சர்
கைது செய்யப்பட்ட போதிலும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, செந்தில் பாலாஜி 'இலாகா இல்லாத அமைச்சராக' தொடருவார் என அறிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தன்னிச்சையாக நீக்குவதாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அமைச்சர்களை நியமிப்பதும் நீக்குவதும் முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம் என்று முதல்வர் ஸ்டாலின் வாதிட்டார்.

கிடைத்தது ஜாமின்
இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின், "கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்" என்று விமர்சித்தார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று திமுக கடுமையாகச் சாடியது. சிறையில் இருந்தபடியே அமைச்சராக நீடித்தது பெரும் சர்ச்சையான நிலையில், 2024 பிப்ரவரி 12 அன்று செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். 15 மாதங்கள் சிறையில் இருந்த பின், 2024 செப்டம்பர் 26ல் உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது விசாரணை நியாயமான காலத்தில் முடியாது எனும் காரணத்தையும், ஏற்கெனவே குறைந்தபட்ச தண்டனைக் காலத்தின் கணிசமான பகுதியை அவர் சிறையில் கழித்துவிட்டார் எனும் நியாயத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கியது.

செந்தில்பாலாஜி மீது விஜய் விமர்சனம்
பின்னர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரான பிறகும், வேலை மோசடி வழக்கில் அவர் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்தார். இந்த அனுமதி கோரப்பட்ட கோப்புகளைக் கையாள்வதில் ஆளுநர் அலுவலகத்திற்கும் அரசுக்கும் இடையே பல்வேறு நிர்வாக ரீதியான மோதல்கள் நீடித்து வந்தன.
2025ஆம் ஆண்டு செப்டம்பரில், தவெக தலைவர் விஜய், கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜி, திமுக முதல் குடும்பத்திற்கு பணத்தை கையளிக்கும் ஏடிஎம் ஆக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு செந்தில் பாலாஜி அல்லது திமுக தரப்பில் நேரடி மறுப்பு அறிக்கையோ, பதிலோ வெளியிடப்படவில்லை.

கொங்கு மண்டல பொறுப்பு
கரூரில் தொடர்ச்சியான உள்ளாட்சி, நாடாளுமன்ற வெற்றிகளை திமுகவுக்குப் பெற்றுத் தந்ததாகவும், அதன் காரணமாகவே 2026 தேர்தலில் கொங்கு மண்டல பொறுப்பு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடிமட்டம் வரை தொடர்பு, வலுவலான கட்டமைப்பு ஆகியவை அவரது அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.

ஒரு அரசியல்வாதி மீது ஒரு கட்சியில் இருந்தபோது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, கட்சி மாறியதும் அதே நபர் முக்கிய பொறுப்புகளுக்கு உயர்த்தப்படுவது தமிழக அரசியலின் பொதுவான போக்காக உள்ளது என்பதே அரசியல் விமர்சகர்களின் முதன்மையான விமர்சனம். ஸ்டாலின் அறிந்திருக்கும் ஊழல் தகவல்களுக்காகவே அவரைப் பாதுகாக்க முயல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். இதேபோன்று மின்மாற்றி கொள்முதல் டெண்டரில் பல ஏலதாரர்கள் ஒரே விலையை குறிப்பிட்டிருந்தது சந்தேகத்திற்குரியது என மனுதாரர் தரப்பு வாதிட்டதும் செய்திகளாக வெளியாகின.

மீண்டும் அமைச்சராக... மீண்டும் ராஜினாமா...
ஜாமினுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 29ல், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் பிணையை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியதுடன், சாட்சிகளை அவர் கலைக்கவோ, அல்லது பாதிக்கச் செய்யவோ வாய்ப்புள்ளதாக வாதிட்டது 2025 ஏப்ரல் 23 ஆம் தேதி நீதிமன்றம் ஒரு கடினமான தேர்வை முன்வைத்தது. அதாவது அமைச்சராகத் தொடர்ந்தால் பிணை ரத்தாகும் அல்லது ராஜினாமா செய்தால் பிணையுடன் சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் அது. வேறு வழியின்றி ஏப்ரல் 27 ஆம் தேதி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் ரெய்டு...
2023 மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்புடைய கரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது சகோதரர் வி.அசோக் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களின் இல்லங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனைகள் நடந்த நாட்களில், திமுக ஆதரவாளர்கள் கூட்டமாக அசோக்கின் இல்லம் முன் திரண்டு, அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் தடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த IT சோதனைகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகே நடந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐக்கு சென்ற வழக்கு
2021 முதல் 2023 வரை, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், TANGEDCO 45,800 மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கத் தலைவர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி இணைந்து 2023ல் புகார் அளித்தனர். 2026 ஏப்ரல் 29 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மாநில ஊழல் தடுப்புத் துறையிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, டெண்டர் நடைமுறை 1987 முதல் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்றும், முடிவெடுப்பது மூன்று கமிட்டிகள் என்றும், அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். ஆனாலும் 2026 மே 11 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது.

திமுக vs தவெக
2025 செப்டம்பர் 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. TVK நிர்வாகிகள் சிலர், கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜியும் காவல்துறையும் இந்த விபத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, கூட்டத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் பொறுப்பு என்றும், தண்ணீர் பாட்டில் ஒன்று கூட வழங்கப்படவில்லை என்றும், தான் இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் நேரடியாக தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்து, தான் காவல்துறை நிர்ணயித்த நேரத்திற்கே வந்ததாகவும், செந்தில் பாலாஜி மீதும் திமுக மீதும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டி
இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. விஜய் மூன்று முறையும், செந்தில் பாலாஜி டெல்லியில் சிபிஐ தலைமையகத்தில் ஒரு முறையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 2026 ஏப்ரல் 23ல் வாக்குப்பதிவு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், செந்தில் பாலாஜி வழக்கமான கரூர் தொகுதிக்குப் பதிலாக கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார் . மே 4ல் வெளியான முடிவுகளில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தொங்கு சட்டமன்றம் உருவானது. தவெக 108 இடங்கள், திமுக கூட்டணி 73 இடங்கள், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் பிடித்தது.

வழக்குகள் தவெக அரசு கையில்...
மே 10ல், TVK-INC கூட்டணி அரசு அமைக்க, விஜய் தமிழகத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார். இதன் விளைவாக, செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் இனி திமுக ஆட்சியில் அல்ல, புதிய தவெக தலைமையிலான அரசின் கீழ் தொடரும் நிலை உருவானது. மின்மாற்றி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக முந்தைய திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதைத் தொடர்வதா வேண்டாமா? என்பது புதிய முதலமைச்சர் விஜய் முன் உள்ள கேள்வி.
2011ல் அதிமுக போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், 2018ல் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது வரையிலான செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் மாற்றங்கள் வியக்கத்தக்கவை.

சர்ச்சைகள் தொடர்கதை...
குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக (Cash-for-Jobs Scam) எழுந்த புகார்கள் இன்றும் அவரைத் துரத்துகின்றன. 2016ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி ஒரு ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின், பின்னாளில் அவரை அரவணைத்தது ஏன்? என்பது ஒரு அரசியல் மர்மம். சர்ச்சைகளையும் செந்தில் பாலாஜியை பிரிக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவருக்கெதிரான சர்ச்கைள் இன்று வரை தொடர் கதையாகவே உள்ளது.

Related Link
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி, எம்எல்ஏவிடம் கோடிகளில் பேரம்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி, எம்எல்ஏவிடம் கோடிகளில் பேரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு தலைவன் சரியான முடிவை எடுக்காவிட்டால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்

2
3 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau