Also Watch
Read this
தவெக உடன் கூட்டணி வைக்குமாறு தேர்தலுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டதாக சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இயற்கைக்கு முரணாக திமுக உடன் கூட்டு சேர முயன்றதை ஏற்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தவெகவில் சி.விஜயபாஸ்கர்...
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இணைப்புவிழாவில் பேசியதாவது;
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தவெகவில் இணையும் முடிவை எடுத்து உள்ளோம். தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று, தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தினோம்.

எடப்பாடி பழனிசாமி, செவி மடுக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகும், தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை தவெகவுக்கு வழங்கி உள்ளதால், தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதனையும் இபிஎஸ் ஏற்கவில்லை.

திமுக உடன் கூட்டு
எம்ஜிஆரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து,

தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானித்து, பக்கத்து மாநிலங்களை அதிர வைத்திருக்கும், மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி நமது முதல்வர் விஜய். தமிழக அரசியலில், சத்தமின்றி மவுனப் புரட்சியாக மாபெரும் அரசியல் விசில் புரட்சியை விஜய் நிகழ்த்தி உள்ளார். தமிழக மக்களை தனது நெஞ்சிலே குடியமர்த்தி உள்ள ஒரு தலைவரை நாம் பெற்று உள்ளோம்.

மகிழ்ச்சி, மலர்ச்சி, புத்துணர்ச்சி
இத்தகைய தவெக குடும்பத்தில் நாங்கள் எங்களை இணைத்துக் கொண்டு உள்ளோம். தமிழக மக்களின் கனவுக்கு இன்று ஒரு பாதை கிடைத்து உள்ளது. எளிய மக்களின் குரலை செவி மடுக்க ஒரு இயக்கம் கிடைத்து இருக்கிறது. நம் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற ஒரு களம் கிடைத்து உள்ளது. மாற்றத்தை விரும்பிய ஒவ்வொரு மனதிற்கும் ஒரு நம்பிக்கை கிடைத்து உள்ளது. தொண்டர்களை தோழர்களாக கருதும் தலைமைப் பண்புள்ள ஒரு தலைமையை நாம் பெற்று உள்ளோம். இந்த இணைப்பு மகிழ்ச்சி, மலர்ச்சி, நம்பிக்கை, புத்துணர்ச்சியை தருகிறது.

இது டிரெய்லர் தான்...
தவெக வேறு தமிழகம் வேறு அல்ல என்ற மக்களின் தீர்ப்பை மனதில் ஏந்தி, வர இருக்கும் அனைத்து தேர்தல்களிலும், தவெக இனி வெற்றி பெறும். உறுதியான அந்த ஒற்றை தலைமையில் நாம் பயணித்து வெற்றி வாகை சூடுவோம்.உங்களுக்கு துணை நிற்போம், உழைப்போம். எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்திருக்கும் இந்த நல்லாட்சி தொடர்ந்திட உழைத்திடுவோம்.

இங்கே நீங்கள் பார்ப்பது வெறும் டிரெயிலர் தான். மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம். தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாபெரும் இணைப்பு விழாவை நடத்துவோம்.
இவ்வாறு சி.விஜயபாஸ்கர் பேசி உள்ளார்.