Also Watch
Read this
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவாலயத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கி இருக்கின்றன. வெறும் 59 இடங்கள் என்ற இந்தச் சரிவு, கட்சி எதிர்காலத்தை தீர்மானிக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அமைக்கும் நிர்ப்பந்தத்தை நோக்கி, திமுகவை உந்தி தள்ளியுள்ளது. அனுபவம், நிர்வாகத் திறன், இளம் ரத்தமும் கலந்த இந்தக் குழுவின் பணி என்ன? திமுகவின் அடுத்த 100 ஆண்டுப் பயணத்தைத் தீர்மானிக்கப் போகும் இந்த 'ஆகஸ்ட் அறிக்கை'யைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள அரசியல் பின்னணி என்ன?

இது ஒரு பாடம்...
2026, மே 04ஆம் தேதி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு எதிர்பாராத திருப்புமுனை. 108 இடங்களைக் கைப்பற்றி சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரியணையில் ஏற, ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களுடன் ஒரு பெரும் சரிவைச் சந்தித்தது. அரை நூற்றாண்டு கால அரசியலில் வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் கண்ட திராவிட முன்னேற்றக் கழகம், இப்போது அதன் ஆணிவேரைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. சந்தித்தது வெறும் தோல்வி அல்ல, இது ஒரு பாடம்.

10 பேர் கொண்ட...
இந்தப் பாடத்திலிருந்து உருவானதுதான் இந்த 'மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு 2026'. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் தேர்வு வெறும் மேலோட்டமாக அல்லது வெறும் கண் துடைப்பிற்காக அல்லாமல், 'உடன்பிறப்பின் குரல்' வழியாகப் பெறப்பட்ட சுமார் 6 லட்சம் கருத்துக்கள், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அலசப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நுணுக்கமான அரசியல் அறுவை சிகிச்சைக்கான கருவி என்பதை தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர் போன்ற மூத்த முன்னாள் அமைச்சர்கள் இக்குழுவின் தூண்களாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நீண்டகால அரசியல் அனுபவம் அடிமட்டத் தொண்டர்களின் நாடித் துடிப்பை அறிய உதவும் என்று திமுக தலைமை நம்புகிறது.

பாரம்பரியமாக திமுகவில்...
மருத்துவர் எழிலன், இ.பரந்தாமன், ச.முரசொலி எம்.பி. போன்ற இளம் முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, கட்சியின் எதிர்காலத்தை அடுத்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாற்றுக் கட்சிகளிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு இந்த குழுவில் இடம் பெறாததும், பாரம்பரியமாக திமுகவில் இணைந்து பயணிப்பவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. மாவட்டச் செயலாளர்களின் செல்வாக்கு, உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இன்மை குறித்து தொண்டர்கள் பகிர்ந்து கொண்ட 6 லட்சம் கருத்துகள், வெறும் காகிதங்கள் அல்ல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அலசப்பட்ட உண்மைகள். இந்த ஆய்வறிக்கைகளின் சாரத்தை உள்வாங்கிச் செயல்படுத்தக் கூடியவர்களே இக்குழுவின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதிகார பரவலாக்கம்
இந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள பொறுப்புகள் அசாத்தியமானவை. தற்போதுள்ள 78 மாவட்ட செயலாளர்களின் சுமையைக் குறைக்க, மாவட்டங்களின் எண்ணிக்கையை 100க்கும் மேலாக, தேவைப்பட்டால் 120 ஆக அதிகரிக்க இக்குழு பரிந்துரைக்கும். நான்கு முதல் ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கவனித்த ஒரு செயலாளர், இனி இரண்டு முதல் நான்கு தொகுதிகளை மட்டுமே கவனிக்கும் வகையில் அதிகார பரவலாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

ஆண்டு முழுவதும்...
இளைஞரணி, மகளிரணி எனப் பல ஆண்டுகளாக ஒரே முகங்கள் நீடிப்பதைத் தடுத்து, களத்தில் வியூகம் அமைக்கும் புதியவர்களுக்குப் பதவி வழங்க வழிகாட்டுதல் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் குழுக்களுக்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பிரச்சார உத்திகளைக் கண்காணிக்கும் ஒரு 'திங்க் டேங்க்' அமைப்பை உருவாக்க இக்குழு திட்டமிட உள்ளதாக கூறப்படுகிறது.

மறு சீரமைப்பும், புனரமைப்பும் தங்களது கடந்தகால குறைகளை நீக்கி, புதிய வடிவில் மக்களை அணுகுவதற்கு முற்றிலும் அவசியமானவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அதிரடி மாற்றத்தை முன்னெடுத்திருப்பதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள். ஆனால், இந்த மாற்றங்கள் மட்டும் போதுமா? உட்கட்சிப் பூசல்களையும், கூட்டணி விரிசல்களையும் இந்தக் குழு எவ்வாறு கையாளப் போகிறது? ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தக் குழு சமர்ப்பிக்கப் போகும் அந்த 'ரகசிய' அறிக்கை தான், திமுகவின் அடுத்த நூறாண்டு காலப் பயணத்தைத் தீர்மானிக்கப் போகிறது.

பழைய வேர்களா? புதிய கிளைகளா?
ஆகஸ்ட் இறுதிக்குள் திமுகவில் ஒரு பெரும் பதவி மாற்றப் புயல் வீசப்போவது மட்டும் உறுதி. பழைய வேர்கள் பலப்படுத்தப்படுமா? அல்லது புதிய கிளைகள் துளிர்க்குமா? அறிவாலயத்தின் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்காகத் தமிழக அரசியல் களம் காத்துக் கொண்டிருக்கிறது.