Also Watch
Read this
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் நாற்காலியை சுற்றி, கொங்கு மற்றும் வட மாவட்ட முக்கிய புள்ளிகள் இணைந்து அரங்கேற்றிய அரசியல் வியூகங்கள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமியின் சமாதான முயற்சிகளை முற்றிலும் நிராகரித்துவிட்டு, கட்சியின் ஹெவிவெயிட் மாஜிக்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் திரண்டு தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இபிஎஸ் நீட்டிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை, வேலுமணி நிராகரித்தது ஏன்? கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பின்னணியில் இருக்கும் அண்டர்கிரவுண்ட் ரகசியம் என்ன?

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு...
தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடையே நிலவும் மோதல்கள் கட்சியை பெரிதும் பலவீனப்படுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் தவெக அரசு அமைந்தபோது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலேயே, கொங்கு மண்டலத்தின் முகமாக விளங்கும் வேலுமணியும், வட மாவட்டங்களில் செல்வாக்குமிக்க சி.வி.சண்முகமும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு மறைமுக அரசியல் வியூகத்தை வகுத்து தங்களின் பலத்தை நிரூபித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகள் தொடர் ராஜினாமா செய்ய தொடங்கினர். கூடாரம் காலியாவதை பார்த்து பதறிப்போன கட்சி தலைமை, டேமேஜ் கன்ட்ரோல் செய்ய நினைத்து, வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் என்கிற பகட்டான பதவியை பஞ்சாமிர்தமாக நீட்டியது. ஆனால், அங்கேதான் எடப்பாடியாரின் டிவைட் அண்ட் ரூல் பாலிசியை மோப்பம் பிடித்து செக் வைத்துள்ளார் வேலுமணி.

பதவி வேண்டாம்...
கடந்த 4ஆம் தேதிக்குள், நீங்கள் இழந்த மாவட்டச் செயலாளர் பதவிகள் அனைத்தையும் அப்படியே ரிட்டன் தந்துவிடுகிறேன் என்று எடப்பாடியார் கொடுத்த அந்த அண்டர்கிரவுண்ட் வாக்குறுதியை நம்பி வேலுமணி தரப்பு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தது. ஆனால், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தூக்கி கொடுத்து, வேலுமணியின் கொங்கு சாம்ராஜ்யத்துக்குள் ஆப்பு வைத்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், உச்சகட்ட டென்ஷனான வேலுமணி தரப்பு, கட்சியின் ஹெவிவெயிட் சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோரை திரட்டி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

தொண்டராகவே இருப்போம்...
அவர்கள் அனுப்பிய அந்த வெடிமருந்து அறிக்கையில், தாங்கள் வழங்கியுள்ள கட்சிப் பதவிகளை ஏற்று, கட்சிப் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள். எங்களுக்கு உங்கள் பதவிகள் வேண்டாம். சாதாரண தொண்டனாகவே இருக்கிறோம் என்று முகத்தில் அடித்தார் போல் பஞ்ச் வைத்துள்ளனர். தனக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் பதவியை வேலுமணி நிராகரித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 7 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதுதான் இப்போதைய அரசியல் களம் உற்றுநோக்கும் முக்கிய நகர்வாக மாறியிருக்கிறது.

ஆதரவாளர்களிடம் ஆவேசம்
இதற்கிடையே, கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் உள்வட்டார ஆலோசனை கூட்டத்தின் வீடியோ வெளியாகி, அதிமுகவின் உள்வீட்டு விவகாரங்களை அப்படியே பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது. தனது ஆதரவாளர்கள் புடைசூழ உட்கார்ந்து கொண்டு எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பேசும் அந்த வீடியோ அரசியல் நகர்வுகளை உற்று நோக்குபவர்களையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில், தன்னை நம்பி 30 பேர் தனி அணியாக வந்திருக்கும்போது, அவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்காமல் எனக்கு மட்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தால் அதை எப்படி ஏற்க முடியும்? தங்கமணியும், விஜயபாஸ்கரும் அந்தந்த மாவட்டங்களில் ஜாம்பவான்களாக இருக்கும் நிலையில், அவர்களை ஓரம் கட்டிவிட்டு தான் மட்டும் எப்படி இந்த உயர்பதவியை பெற்றுக்கொள்ள முடியும்? என்று எடப்பாடி பழனிசாமியின் பதவி ஆசை காட்டும் தந்திரத்தை அக்குவேறு ஆணிவேறாக துகிலுரித்து காட்டியுள்ளார்.

பொதுச்செயலாளர் நாற்காலி...
இந்த விவகாரத்தின் ஆழத்தை ஆராய்ந்தபோது, இலை கட்சிக்குள்ளே ஒரு பிரம்மாண்டமான அதிமுக 2.0 ஆபரேஷன் ஜரூராக அரங்கேறி வருவது அம்பலமாகி இருக்கிறது. தன்னை நம்பி வந்த 30 விசுவாசிகளும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரமிக்க பதவிகளை தராவிட்டால், அடுத்த கட்டமாக தலைமையின் அதிகாரப் பிடியை அசைத்து பார்க்கவும், பொதுச்செயலாளர் நாற்காலியை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்கிற நேரடி எச்சரிக்கை தான் இந்த வீடியோ கசிவும், கூட்டு ராஜினாமா கடிதங்களும் என்கிறார்கள் அரசியல் உற்றுநோக்காளர்கள்.

கொங்கு மற்றும் டெல்டா லாபிகளின் போர்க்கொடியை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்? சரிந்து வரும் தன் கோட்டையை அவர் எப்படி காக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.