Also Watch
Read this

கரூரில் சதி திட்டம்
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் நடக்கும் திருப்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக உள்ளது. அதிமுகவில் இருந்து ஒவ்வொரு சக்கரமாக கழன்று தவெகவில் இணைந்து கொண்டிருக்கின்றன. தற்போதுவரை அதிமுகவை சேர்ந்த 6 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இவர்கள் இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டால் தமிழக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் நிலை வரும். அதோடு, ஆதரவாளர்களின் சப்போர்டில் நின்று கொண்டிருக்கும் நிலையும் மாறும். இதனிடையே, தவெக ஆட்சியை கவிழ்க்க திமுகவும், அதிமுகவும் சதி செய்து வருவதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கரூரில் வைத்து சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.

ரூ.35 கோடி பேரம், மிரட்டல்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரபல யூடியூபரும், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும் IDPS அமைப்பை சேர்ந்தவருமான திருநாவுக்கரசு, கடந்த சில நாட்களுக்கு போன் செய்து அரசியல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என கூறினார்.

ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாககூறி இணைப்பை துண்டித்தும், மீண்டும் போன் செய்து சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது தான் சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறி 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் கரூர் சென்று சக்தி மெஸ் உணவகத்தை நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில், கார்த்தியும், ரமேசும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் நரேஷை சந்தித்தது தெரியவந்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்
மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே திருநாவுக்கரசு, எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், பத்துக்கும் மேற்பட்ட தவெக எம்எல்ஏக்களுடன் திமுகவினர் பேரம் பேசி இருப்பதாகவும், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தலா 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும், ஒரு சிலர் பேரத்திற்கு படிந்து, முன்பணத்தை வாங்குவதற்கு தயாராக இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில் மீதமுள்ள எம்எல்ஏக்களும் புகார் கொடுக்கும்படி சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.