Also Watch
Read this
தவெக தலைமையில், புதிய கூட்டணி உருவாகும் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், கூட்டணிக்கான பெயர் தன்னிடம் உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் போட்டு உடைத்துள்ளார். தவெக ஆட்சி 2 மாதத்தில் கலையும், 6 மாதத்தில் கலையும் என ஒரு சிலர் பேசி வருவதாகவும், முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக தவெக
2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழ்நாடு அரசியலை அசைத்து பார்த்ததோடு, கூட்டணியும் தலைகீழாக மாறியது. 108 இடங்களில் தனித்து வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது.

மேலும் காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல். மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக தலைமையில் புதிதாக அமையவுள்ள கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தவெக ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் தவெக சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

5 ஆண்டுகள் தவெக ஆட்சி
கூட்டத்தில் பேசிய விஜய், தோழமை கட்சிகளின் செயல்பாடுகளை சரியாக ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும் என்றும், தவெக தோழமை கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட ஒரு பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு தன்னிடம் ஒரு பெயர் உள்ளதாக கூறிய விஜய், அடுத்த கூட்டத்தில் தவெக தலைமையில் அமையவுள்ள கூட்டணி கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் தவெக ஆட்சி 2 மாதத்தில் கலையும், 6 மாதத்தில் கலையும் என ஒரு சிலர் பேசி வருவதாகவும், தவெக ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும் நம்பிக்கையோடு இருங்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ப.சிதம்பரம் நம்பிக்கை, விஜய் நன்றி
பின்னர் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் கவலைப்பட வேண்டாம் 5 ஆண்டுகள் உங்களோடு நாங்கள் இருப்போம் என்று கூறியதும் முதலமைச்சர் விஜய் அவருடைய கையை பிடித்து நன்றி தெரிவித்து கொண்டார்.

1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்த நிலையில், இடதுசாரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், தோழமை கட்சிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒரு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக விளக்கினார்.

மேலும் இந்தியா கூட்டணியில் தவெக இணையுமா? என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.