Also Watch
Read this
அதிமுக தலைமை மீதான அதிருப்தியால், சுயமாக எடுத்த முடிவின் பேரிலேயே தவெகவில் இணைந்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உள்ளார். திமுகவினர் குற்றம் சாட்டுவது போல், தவெகவில் இணைய வருமாறு தனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இருந்து...
அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, அமராவதி மேம்பாலத்தில் உள்ள பூங்காவை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கக் கோரி மனு அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது;

மகாபலிபுரத்தில் அளித்த பேட்டி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் இணைவதற்கு யாரும் கூப்பிடவில்லை. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். யாருடைய தூண்டுதலாலும் அல்ல.

கரூர் நிர்வாகிகள் விருப்பம்
கரூரில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என என்னிடம் கூறினர். இதுசம்பந்தமாக 11 ஆலோசனை கூட்டம் நடத்தினோம். ஒரு சிலர் வேண்டாம் என்று கூறினர். அதிகப்படியானோர் சேரலாம் என்று தெரிவித்ததன் காரணமாக, எனது சுய விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. அதனால்தான் பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர்.

செந்தில்பாலாஜி வழக்கில்...
வெண்ணமலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் இனாம் நிலப் பிரச்சினைக்கு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு சிறப்பு குழு அமைத்து நிரந்தர சட்டரீதியான தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை நீதிமன்ற விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிவரும்.
இவ்வாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.