Also Watch
Read this
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக, போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக, ஒருமையிலும், சர்ச்சையாகவும் பேசியதாக தவெகவினர் அளித்த புகாரில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை Q BRANCH போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் இரு எம்எல்ஏக்கள் கைது
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் கைதான தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது திமுக எம்.எல்.ஏ. ஆவார். திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே கைதாகி பிணையில் உள்ள நிலையில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், தலைமைக்கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தவெகவினர் போலீசில் புகார்
இந்த நிலையில், மார்க்கண்டேயன் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால், புகார் எதுவும் வழங்காமல் சென்று விட்டனர். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம், தவெகவினர் புகார் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் மற்றும் திரளான போலீஸார் இன்று ஜூலை 20ஆம் தேதி, காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்தனர்.

ஆதரவாளர்கள் மறியல், பதற்றம்
அப்போது, காலை நடைபயிற்சி முடித்துவிட்டு, மார்கண்டேயன் வீட்டுக்கு வந்தார். போலீஸார் எம்.எல்.ஏ.விடம் கைது செய்ய வந்தது குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார்.

அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரளான திமுகவினர் திரண்டனர். அவரை கைது செய்து வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தபோது, போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றினர். இதை கண்டித்து திமுகவினர் வாகனத்தை மறித்து அமர்ந்து, கோஷங்களை முழங்கினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி விட்டு மார்க்கண்டேயன் எம்எல்ஏவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பதற்றம் நிலவியது.

வழக்கு விவரம் என்ன?
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 351/3, 352/ 353/3 ஆகிய மூன்று பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்று பேசுவது, இரண்டு அமைப்பு அல்லது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது என வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.