Also Watch
Read this
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 6 மாதங்களாக நீரில்லாமல் தவித்து வரும் நிலையில், அரசாங்கம் மனசு வைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 50 ஆண்டு கால போராட்டத்துக்கு பின்னரே சாலை வசதி கிடைத்திருக்கும் சூழலில் குடிநீர் வசதி எப்போது கிடைக்குமோ? என கிராம மக்கள் நொந்து கொள்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சினாலும்...
மரங்கள், செடிகள் என்று, இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த போதமலை காட்சி அளித்தாலும், அம்மலை அடிவாரம் வசிக்கும் மக்களின் வாழ்க்கையோ அதற்கு நேர் மாறாகத் தான் இருக்கிறது.

கூடுகளை போல் சிறு வீடுகளை கட்டிக்கொண்டு குருவிகளை போன்று வசிக்கும் இந்த மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதியென்பது எட்டினாலும் பிடிக்க முடியாத கனியாக தான் இருக்கிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்று சோதனை செய்யும் நம் நாடு, கடைக்கோடியில் வாழும் எளிய மக்களின் நிலையை கவனிக்க தவறிவிட்டதா? என்று தான் நொந்து கொள்ள வைக்கிறது.

50 ஆண்டு கால போராட்டம்
நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளைக் கடந்தாலும், நாமக்கல் மாவட்டம் போதமலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களின் 50 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் இப்போது தான் சாலை வசதியே கிட்டியது. அம்மலை அடிவாரத்தில் உள்ள கீழூர், மேலூர், நடுக்காடு ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500 பேர் வசித்து வரும் நிலையில், உயிர் போகும் அவசரம் இருந்தாலும் கூட 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சாலை இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் தலையில் சுமந்தே இந்த கிராமங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், அண்மையில் சாலை அமைக்கப்பட்டதாலே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் அதிகாரிகள் எடுத்துச் சென்றதை நாம் செய்திகளில் கண்டிருப்போம்.

2 கி.மீ. நடந்து சென்று...
அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த கிராமங்களில் இயற்கையும் சதி செய்கிறது என்பதை போல 6 மாதங்களாக மழை பொழியாமல் வறட்சியை காட்டி வருகிறது. கிராமங்களை சுற்றிலும் தண்ணீர் டேங்குகள், துருப்பிடித்த பைப்புகள் இருந்தாலும், ஒரு பிரயோஜனமும் இல்லை, அதில் ஒரு சொட்டு கூட நீர் வராது. அதனால் செங்குத்தான மலைப்பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்தே சென்று ஓடையில் நீர் எடுக்கும் நிலைக்கு தான் அக்கிராமங்களின் மக்கள் உள்ளனர். அந்த ஓடையிலும் நீர் கரைபுரண்டு எல்லாம் ஓடவில்லை, குழியில் தேங்கி மட்டுமே கிடைக்கிறது.

அடிப்படை வசதிகளுக்காக...
இப்படி நிலைமை இருக்கையில், கடந்த திமுக ஆட்சியில் குடிநீருக்காக கிணறு அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகளும் வழக்கம் போல் தங்கள் வேலையை காட்டிவிட்டு, பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.

பள்ளி இல்லை, ஆரம்ப சுகாதர நிலையம் இல்லை, அரசு நியாய விலை கடை இல்லை என, இந்த கிராமங்களை சுற்றிலும் ஏகப்பட்ட இல்லை சுழன்று அடிக்கிறது.

நகரங்களில் மற்றும் ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வாழ்வியலை மேம்படுத்த ஓடி கொண்டிருக்கும் வேளையில், இந்த போதமலை கிராமங்களின் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக தங்களது வாழ்நாள் முழுக்க ஓடி கொண்டிருக்கின்றனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் கெளரிசங்கர்...