Also Watch
Read this
By: Manigandan Raja
ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன், மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் என்ற வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றியதா? திமுகவின் திட்டங்களைக் காப்பி அடித்து, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுமுன் வைத்துள்ளார்.
தமிழகத்தில், மீண்டும் திமுக ஆட்சி அமைய மக்கள் வாக்கு செலுத்துவார்கள் என்று மக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பயணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது;
அதிமுக ஆட்சியில் பல திட்டங்களைச் சொன்னார்களே செய்தார்களா? எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால், திமுக சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லுமென மக்களுக்குத் தெரியும். இதுதான் திமுக.

மனமிருந்தால் மார்க்கமுண்டு
அரசு ஊழியர்களுடைய 22 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். அதை, யாராலும் செய்ய முடியாதெனச் சொன்னார்கள். ஆனால், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பாணியில் திமுக அதைச் செய்திருக்கிறது. நாம் சொல்லிவிட்டுச் செய்தவற்றைவிட, சொல்லாமலே பல முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதுதான் பெரிய சாதனை.

இன்னும் பல கனவுத் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பு திராவிட மாடல் 2.0ல் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் எனக்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழு அளவில் இருக்கிறது. அந்த நம்பிக்கையை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நான் போகும்போதும் உங்கள் முகத்தில் பார்க்கிறேன். மக்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் மகிழ்ச்சி.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved