Also Watch
Read this
தஞ்சை அருகே தடகள வீராங்கனையை அவருடைய பெற்றோர், உறவினர்கள் அடித்து இழுத்து சென்ற வீடியோ வெளியான நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பணம் வாங்கி கொண்டு மகளை திருமணம் செய்து வைக்க பெற்றோர் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் அவர்களுடைய பாணியில் விசாரித்தால் மொத்த உண்மையும் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ வெளியாகி அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த சின்னகுமுளை பகுதியை சேர்ந்த கங்காள மூர்த்தி என்பவரின் மகள் நிதிஷா. பெற்றோர் சம்மதத்துடன் பட்டுக்கோட்டை அடுத்த நந்திவயல் பகுதியில் வசிக்கும் தூரத்து உறவினரான ஹரிஹரன் என்பவரது வீட்டில் தங்கி, கல்லூரி படித்து வந்ததோடு தடகள விளையாட்டுக்கும் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிதிஷாவை அவருடைய பெற்றோர் அடித்து இழுத்து செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிங்கப்பெண் அதிரடி படைக்கு...
இதையடுத்து, நிதிஷாவை திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, நிதிஷா அளித்த தகவலின் பேரில் ஹரிஹரன், சிங்கப்பெண் அதிரடி படைக்கு புகார் அளித்தார். சிறிது நேரத்தில் தில்லை நகரில் உள்ள மனநல மருத்துவமனைக்கு வந்த சிங்கப்பெண் அதிரடி படை போலீசார், பெற்றோர் மற்றும் நிதிஷாவிடம் விசாரணை மேற்கொண்டு அழைத்து சென்ற நிலையில், சமூக நலத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்த அதிகாரி விஜயலட்சுமி, 5 நாட்கள் மன்னார்புரம் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

பரஸ்பர பகிரங்க குற்றச்சாட்டு
இதுகுறித்து பேட்டியளித்த நிதிஷாவின் தந்தை கங்காள மூர்த்தி, பெற்றோர் அனுமதி இல்லாமல் மகளை வேறொரு கல்லூரியில் ஹரிஹரன் சேர்த்ததாகவும், பல மாணவிகளை வீட்டில் வைத்து கொண்டு அடிமை போல் வேலை வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய குற்றச்சாட்டுக்கு ஆளான ஹரிஹரன் மனைவி சொர்ண பிரியா, நேற்று வரை ஓட்டுநர் பயிற்சி பெற்று வந்த மாணவியை எப்படி மனநல மருத்துவமனையில் சேர்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், கடன் சுமை காரணமாக பணம் வாங்கி கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மாணவி நிதிஷா அளித்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதனை மீறி அடித்து இழுத்து சென்றதற்கான காரணம் என்ன? மாணவியை திருமணம் செய்து வைக்க தான் அடித்து இழுத்து சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.