Also Watch
Read this
குறைந்த விலையில் தங்கக்காசு எனக்கூறி, சக காவலர்களையே நம்ப வைத்து கோடிகளை ஏப்பம் விட்ட பெண் இன்ஸ்பெக்டர் 21 நாட்களாக யார் கண்ணிலும் சிக்காத நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கு தான் வெறும் ஆக்டிங் டிரைவர்தான், மோசடியிலும் தான் ஆக்டிங் அதிபர்தான் என ஏற்கெனவே பிடிபட்ட ஷீலா மேரியின் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், மோசடி பணத்தில் இன்ஸ்பெக்டர் திருமண மண்டபங்களை வாங்கி குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தங்க காசுகள் கொட்டும்...
குற்றங்களை தடுக்க வேண்டிய பெண் இன்ஸ்பெக்டரே அதற்கு மூளையாக இருந்து, தனது ஆக்டிங் டிரைவர் மூலம் கோடிகளை சுருட்டி உள்ளார் என்றால் என்ன சொல்வது?
சென்னை, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் ஷீலா மேரி.

இவர் தனது உறவினரான பிரபுமணி மூலமாக கடந்த 2023ஆம் ஆண்டு கொடுங்கையூர் பகுதியில் ’விநாயகம் என்டர்பிரைசஸ்’ என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலையிலேயே உங்கள் வீட்டில் தங்கக்காசுகள் கொட்டும், செல்வத்தின் அதிபதியான குபேரன் உங்கள் வீட்டிலேயே குடியிருப்பார், குறைந்த விலையிலேயே நிலத்திற்குமேல் நிலத்தை வாங்கி குவிக்கலாம் என கவர்ச்சிகர விளம்பரம் செய்துள்ளார்.

போலீஸ் வாகனத்தில் வலம்
இந்த விளம்பரத்தைவிட இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியுடன் பிரபுமணி வலம் வந்ததை தான் பலரும் நம்பி உள்ளனர். ஊர்க்காவல்படையில் இருந்த பிரபுமணி பலநேரங்களில் ஷீலா மேரிக்கு ஆக்டிங் டிரைவராக காவல் வாகனத்தில் சுற்றி வந்துள்ளார். முதலீடு தொடர்பாக பேசுவதற்கும், பணத்தை வசூலிப்பதற்கும்கூட காவல் வாகனத்தில்தான் வந்துள்ளார் பிரபுமணி. இன்ஸ்பெக்டருக்கு பிரபுமணி எப்படி ஆக்டிங் டிரைவரோ அப்படிதான் தங்கக்காசு மோசடி வேலைக்கும் அவர் ஆக்டிங் அதிபர் போன்று இருந்துள்ளார். ஆனால், அதனை பின்னால் இருந்து இயக்கியதே ஷீலா மேரிதான்.

கோடிகளில் முதலீடு
காவல் வாகனம், கூடவே இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, கவர்ச்சிகர விளம்பரம் என அத்தனையும் சக காவலர்களின் ஆசையை தூண்டியதோடு முதலீடு செய்யவும் வைத்தது. முதலில் சில ஆயிரங்கள் மற்றும் லட்சங்களில் முதலீடு செய்த காவலர்களுக்கு பிரபுமணி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சொன்னபடியே பளபளவென தங்கக்காசுகளை கண்ணில்காட்டி நம்பிக்கையை பெற்றுள்ளார். இது ஒன்று போதாதா? சில தங்கக்காசுகளை கையில் பார்த்த காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அடுத்து கோடிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் மளமளவென 200-ஐ தாண்டியது.

எஸ்கேப் ஆன பிரபுமணி
அடுத்து, கோடிகளை முதலீடு செய்த காவலர்களும் கை நிறைய தங்கக்காசுகளை வாங்க காத்துக் கொண்டிருக்க, 2024ஆம் ஆண்டு ’விநாயகம் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தையே மூடிவிட்டு எஸ்கேப் ஆனார் பிரபுமணி. அவசரப்பட்டு விட்டோமே? யாரிடம் சொல்வது? காவல்துறையில் இருந்து கொண்டு கண்மூடித்தனமாக ஒருவரை நம்பி கோடிகளை இழந்துள்ளோம் என்றால் வெளியில் என்ன நினைப்பார்கள்? என உள்ளுக்குள் புழுங்கிய முதலீட்டாளர்கள் பலநாள் புகார் கொடுக்கவே இல்லை. ஆனாலும், பிரபுமணியை தொடர்பு கொள்ள முடியாத காவலர்கள் ஷீலா மேரியிடம் பணத்தை பவ்வியமாக கேட்டுக்கொண்டே இருந்தனர்.

நான் வெறும் அம்புதான்...
அதற்கு எந்த பதிலுமே கிடைக்காத நிலையில், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் கடந்த மாதம் சம்மந்தப்பட்ட காவலர்கள் புகார் அளித்தனர். 20 கோடி ரூபாய் வரை தாங்கள் ஏமாந்துவிட்டதாக அந்த புகாரில் கூறி உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சில நாட்களிலேயே பிரபுமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நிறுவனத்தை தொடங்கி வைத்ததுமுதல் தங்கக்காசுகளை கொடுப்பதுபோல் கொடுத்து கோடிகள் சேர்ந்தவுடன் கூடாரத்தையே காலி செய்ய வைத்தது வரை அனைத்துமே ஷீலா மேரியின் பிளான்தான் என்றும் நான் வெறும் அம்புதான் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார் பிரபுமணி.

தலைமறைவான ஷீலா மேரி
இதனை தொடர்ந்து, ஷீலா மேரியை கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பறந்த சில நிமிடங்களிலேயே ஷீலா மேரியும் கைது நடவடிக்கைக்கு பயந்து காவல்துறை கண்ணிலேயே சிக்காமல் எங்கேயோ பறந்துவிட்டார்.
தலைமறைவாக இருந்த அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கைது, தொடர் விசாரணை
இந்நிலையில், 21 நாட்களுக்குப்பிறகு ஷீலா மேரியை சுற்றி வளைத்து கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார் சுருட்டப்பட்ட கோடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முதற்கட்ட விசாரணையில் மோசடி பணத்தில் ஷீலா மேரி சில மாவட்டங்களில் பழைய திருமண மண்டபங்களை வாங்கி போட்டுள்ளதாகவும், சில இடங்களில் புதிய திருமண மண்டபங்களையே பார்த்து பார்த்து கட்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதனால், அந்த சொத்தின் ஆவணங்களை பறிமுதல் செய்யும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த திருட்டு வேலைக்கு பின்னால் ஷீலா மேரியும், அவரது உறவினர் பிரபுமணியும் மட்டும்தான் உள்ளார்களா? அல்லது காவல்துறையில் உள்ள பெரிய பெரிய அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றகோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.