Also Watch
Read this
தென்மேற்குப் பருவமழை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கேரள மாநிலம் வயநாடு கல்லடியில் சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் பயங்கர மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மண்ணுக்குள் சிக்கியிருந்த ஒரு சிலரை, பொதுமக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மீட்டுள்ள நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் மண் சரிவு ஏற்படக் காரணம் என்ன?

தென்மேற்கு பருவமழை தீவிரம்
வயநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட கோர நிலச்சரிவு சம்பவங்கள் தான். அந்த ரணம் மறைவதற்குள், தற்போது மீண்டும் ஒரு பேரழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மண் சரிவு.

கேரளம் மாநிலம் வயநாட்டின் கல்லடி பாலத்தின் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஊழியர்கள் இங்கு தான் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

மீட்பு பணியில் உள்ளூர் மக்கள்
கொட்டித் தீர்த்த கனமழையால், திடீரென அந்த கட்டுமான பகுதியில் பயங்கர மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்பு, கட்டுமான பகுதி முற்றிலுமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அங்குள்ள உள்ளூர் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து மீட்புப் பணியில் குதித்தனர். அதிகாரிகளும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, மண்ணுக்குள் புதைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் தங்களின் வெறும் கைகளாலும், அங்கிருந்த சிறு உபகரணங்களை வைத்தும் தோண்டி எடுத்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

தடைகளை தாண்டி மீட்பு பணி
இதுவரை 5 முதல் 7 பேர் வரை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து தகவலறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டண்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில், 60 வீரர்கள் கொண்ட 2 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், விபத்து நடந்த பகுதியில் பெரும் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், மீட்பு வாகனங்களோ அல்லது ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களோ சம்பவ இடத்திற்கு செல்வதில் கடும் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. எனினும், தடைகளை தாண்டி மீட்பு படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய காரணம்...
ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 7 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் கடந்த 20ஆம் தேதியே மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளிட்டவற்றில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மனித தவறால் பேரழிவு
இது இயற்கை தந்த விபத்து அல்ல, முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்ற வேளாண் அமைச்சர் சித்திக், கட்டுமான நிறுவனத்தின் தரப்பில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளதாகவும், தோண்டப்பட்ட மண் பாதுகாப்பற்ற முறையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாலேயே இந்த கொடூர விபத்து அரங்கேறியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மண் சரிவுக்கு கொங்கன் ரயில்வேயின் அலட்சியமே காரணம் என்றும், குவிக்கப்பட்ட மண்ணை அகற்ற இருமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், துறைச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் பஷீர் கூறியுள்ளார். அதோடு, இந்த விபத்துக்கும், பொதுப்பணித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அவர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன்தான் இப்பணிகள் நடந்தன என திட்டவட்டமாக தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் உத்தரவு
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, வயநாட்டில் உள்ள குவாரிகள், ஹோம் ஸ்டேக்கள், சாகச சுற்றுலா மையங்கள் மற்றும் டிரக்கிங் தளங்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, மேப்பாடி, ஆனக்காம் பொயில், முண்டக்கை போன்ற மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்க வைக்க, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை வழக்குப்பதிவு
கடந்த 2024ஆம் ஆண்டு முண்டக்கை, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்த வயநாடு, மீண்டும் ஒரு மனித தவறால் இத்தகைய விபத்தை சந்தித்திருப்பது உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மண்ணுக்குள் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறிய, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தேசிய மீட்புப் படையினர் அங்கு அடியெடுத்து வைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், வயநாடு மண் சரிவு தொடர்பாக கட்டுமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved