Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அறிவாலயம் தொடுத்த சட்ட யுத்தம், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர், என்று நீதிபதிகள் திமுகவுக்கு கொடுத்த டோஸ் திமுக வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கும் நிலையில், இந்த அவசர வழக்குக்கு பின்னால் இருக்கும் அரசியல் அஜெண்டா என்ன? உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறிய வாதங்கள் என்ன?

உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
கரூரை காட்டி அறிவாலயம் வீசிய லீகல் அம்பு, டெல்லியில் இருந்து ரிட்டனாகி திமுகவின் இமேஜையே பதம் பார்த்திருக்கிறது.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய, தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு செக் வைக்க நினைத்தது திமுக. அதன் பின்னணியில் தான், கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கை கையில் எடுத்து, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. கடந்த ஜூலை 2ஆம் தேதி நடந்த மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் மைக் பிடித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைமைக்கு எதிராக அனல் கக்கும் வார்த்தைகளை கொட்டித்தீர்த்தார்.

கொட்டித் தீர்த்த ஆதவ்
"உதயநிதியின் வாழ்க்கைக்காக மக்களை கொன்று குவித்த திமுக, கரூர் மக்களின் கண்ணீர்தான் மு.க.ஸ்டாலினை கொளத்தூரில் தோற்கடித்தது, ஸ்டாலின் குடும்பத்தில் அவர்தான் கடைசி முதலமைச்சர், இனி கொள்ளையடித்த பணத்துடன் லண்டனில் போய் செட்டில் ஆவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை," என்று திமுக மீது ஈட்டியை பாய்ச்சும் வகையில் பேசினார் ஆதவ் அர்ஜுனா.

திமுகவின் வாதங்கள்
இந்த அதிரடி பேச்சுக்கு அடுத்த 48 மணி நேரத்தில், அறிவாலயத்தின் டேமேஜ் கண்ட்ரோல் டீம் வேலை செய்ய தொடங்கியது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஆக்ரோஷ பேச்சால் ஏற்பட்ட அரசியல் நஷ்டத்தை ஈடுகட்டவும் அதற்கு முட்டுக்கட்டை போடவுமே, ஜூலை 10ல் முதலமைச்சர் விஜய் கரூருக்கு செல்வதை தடுத்து நிறுத்த சாட்சிகளை திசைதிருப்புகிறார்கள் என்ற புகார் மனுவோடு உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஆர்.எஸ்.பாரதி. அரசியல் உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் திமுகவின் வாதங்களைக் கேட்டு அனலாக கொதித்தது உச்ச நீதிமன்றம்.

அடுத்தடுத்து கேள்விக்கணைகள்...
நீதிபதி கே.வி.விஸ்வநாதன், முதலமைச்சரின் பேச்சையும், செய்திகளையும் உச்ச நீதிமன்றமா கட்டுப்படுத்த வேண்டும்? நீங்கள் பேச்சுரிமைக்கு தடை விதிக்கக் கோருகிறீர்களா? அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று அடுத்தடுத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

அதுமட்டுமல்ல, முதலமைச்சரை குற்றவாளி போல சித்தரிக்க முயன்ற திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாருக்கு, முந்தைய திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரிலேயே விஜய் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்ற நீதிபதிகள், ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள் என்றும், உச்ச நீதிமன்றத்தை ஓர் அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம், உங்களுடைய சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து கொள்ளுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் கண்டித்தனர்.

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் பொது வெளியில் கருத்து கூற தடை விதிக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த மனு தள்ளுபடியாகும் நிலைக்கு வந்தவுடன், வேறு வழியின்றி அவசர அவசரமாக மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டது திமுக தரப்பு.

ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்குத் தடை வாங்கப் போய், உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டு திரும்பியிருக்கிறது திமுக. நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால், வரும் 10ஆம் தேதி கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலத்திட்டங்கள் மற்றும் பணி நியமனங்கள் வழங்குவதில் இருந்த அனைத்து சட்ட சிக்கல்களும் தவிடுபொடியாகியுள்ளன.