Also Watch
Read this
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க தடை கோரிய திமுகவின் இடையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபராக எங்கும் முதலமைச்சர் சேர்க்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் திரும்ப பெறப்பட்டது.

திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
முதலமைச்சரின் நிகழ்ச்சியை உச்சநீதிமன்றம் ஒழுங்குபடுத்த விரும்புகிறீர்களா? உதவிகள் வழங்குவது எப்படி வழக்கு விசாரணையை பாதிக்கும்? என திமுகவிற்கு சரமாரியாக கேள்வி எழுப்பி, உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் சாதகமான பதிலால், வரும் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் விஜய் கரூர் செல்வது உறுதியாகி உள்ளது. முதலமைச்சர் கரூர் செல்ல தடை கோரிய திமுகவிற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
கரூரில், தவெக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக கூறியதை தொடர்ந்து, மனுவை திரும்பப் பெற விரும்புவதாக திமுக கூறியது.

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில் கூறி இருப்பதாவது;
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம். இதற்குப் பதிலடி தரப்படும், சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று பேசி உள்ளார். அவரது பேச்சு புலன் விசாரணையில் தலையிடுவதாக உள்ளது. இதற்கிடையே, ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் சென்று கூட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான உத்தரவு, 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது, சிபிஐ புலன் விசாரணையை பாதிக்கும்.

தடை விதிக்க கோரிக்கை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலன் விசாரணையை சிபிஐ நிறைவு செய்யும் வரை, தமிழக முதலமைச்சர் விஜய், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில், வழக்கு குறித்துப் பேச தடை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட விவரங்களை, சிபிஐயிடம் தாக்கல் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் வகுக்கும் விதிகளின்படி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். சாட்சிகள், ஆதாரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. திமுக தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது;
உங்கள் கோரிக்கைகள் அனைத்துமே அரசியல் நோக்கம் கொண்டவை. அரசியல் மேடையாக, நீதிமன்றத்தை மாற்றக்கூடிய தன்மை கொண்டவை. முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்டவர் என கூறி உள்ளீர்கள். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த சிபிஐ பட்டியலில் முதலமைச்சர் விஜய் பெயர் இல்லை. எனவே, உங்கள் வாதம் தவறானது.

அரசியல் மேடையாக மாற்றாதீர்...
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றால், அவர்களின் பேச்சு சுதந்திரத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக உதவிகளை வழங்குவது, வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என நீதிமன்றம் கருதவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பதிலுக்கு நீங்கள் கருத்து தெரிவியுங்கள். ஆனால், அதை ஒரு வழக்காக தொடுத்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்.

திரும்ப பெற்ற திமுக
அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராக எப்படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்? ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா? நீங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து, தனது மனுவை திமுக தரப்பில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.