Also Watch
Read this
கேரளத்தின் வயநாட்டில் கனமழை காரணமாக, திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் மண் சரிந்து வருவதை கண்டதும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வயநாடு மண் சரிவில் சிக்கி, இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மண்ணில் புதைந்த பலரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வயநாடு மண்சரிவின் போது, நின்று கொண்டிருந்த லாரி ஒன்று அடித்து வரப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. மண் சரிவை அடுத்து அங்கிருந்தவர் பதறி அடித்து ஓடும் காட்சிகளும் வெளியானது.

என்ன நடந்தது?
கேரளம் மாநிலம், வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின், அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி, நுழைவாயில் அருகே, இன்று ஜூலை 7ஆம் தேதி, பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலத்துக்கு அருகே இந்த விபரீதம் நிகழ்ந்தது. நிலச்சரிவு நடந்ததுமே அப்பகுதியில் இருந்து ஒருவர் சடலமாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

முதல்வர் சதீசன் விளக்கம்
இந்த நிலச்சரிவு குறித்து தகவல் வெளியிட்ட கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறியிருப்பதாவது;
மீட்பு பணிகளை தாமதமின்றி ஒருங்கிணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார், வேளாண் அமைச்சர் டி.சித்திக் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளேன். மாவட்ட ஆட்சியருடனும் தொலைபேசியில் பேசினேன்.
இவ்வாறு முதல்வர் சதீசன் கூறி உள்ளார்.

"மனித தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு"
இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் டி.சித்திக் கூறி இருப்பதாவது;
இந்த விபரீதம், இயற்கையாக நிகழ்ந்த நிலச்சரிவு அல்ல. மனித தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு. இது நிர்வாக அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு தெளிவான சம்பவம். கல்லாடியில் நிலச்சரிவு நடந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் கொங்கன் ரயில்வேக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்து உள்ளார். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் நேரில் உள்ளார்.

இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொங்கன் ரயில்வேக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களைச் சகித்துக்கொள்ள முடியாது. ஏனெனில், 2 ஆண்டுக்கு முன்பு முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அமைச்சர் டி.சித்திக் கூறி உள்ளார்.

அதி கன மழைக்கான ரெட் அலர்ட்
நிலச்சரிவு நடந்த சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புக்கு அருகே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வயநாடு மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த மொத்தம் 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர், சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved