Also Watch
Read this
கோவை மாவட்டம், தடாகம் அருகே உடல் துண்டாகி, தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவரை தாங்கள் கொ* செய்ததாகக் கூறி இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காதல் விவகாரத்தில் இளைஞரை கொ* செய்ததாகவும், அதற்காக அவருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கழுத்தை இறுக்கி கொ* செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போட்டோ எடுக்க வருமாறு...
கோவை மாவட்டம், சின்னதடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2ஆம் தேதி பிரவீன்குமாரை இன்ஸ்டா மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனது அண்ணன் குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பிரவீன்குமார், நாங்கள் மூன்று பேர் வருவோம் எனக்கூற, அதெல்லாம் வேண்டாம் நீங்கள் ஒருவர் மட்டும் வந்தால் போதும் எனக்கூறி அதற்கான கட்டணத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் வந்துவிட்டால், அங்கிருந்து தனது நண்பர்கள் ஆட்டோவில் பிக்அப் செய்துகொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். அதனை நம்பிய பிரவீன் குமார், கடந்த 2ஆம் தேதி மதியம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். ஆனால், அதன்பின் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சரணடைந்த 2 பேர்
இதற்கிடையே, கிணத்துக்கடவு அருகே உள்ள ஏ.பி.சி. தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்து கிடந்தது பிரவீன் குமார் என தெரியவந்தது. பிரவீன்குமார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் மனோஜ் மற்றும் அவரது நண்பரான கார்த்திகேயன் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி, நாங்கள் தான் பிரவீனை கொ* செய்து தண்டவாளத்தில் வீசினோம் எனக் கூறி அதிர வைத்தனர்.

காதல் விவகாரத்தில்...
இதன் அடிப்படையில் பிரவீன்குமாரின் வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் உபயோகித்த கணினியில் இணைக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண் ஒன்றை எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கரூரைச் சேர்ந்த மனோஜ்குமாரும் கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பெண்ணும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். ஆனால், இவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில், அப்பெண் பிரவீன் குமார் மீது காதலில் விழுந்துள்ளார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் முன்னாள் காதலன் மனோஜ்க்கு தெரியவந்துள்ளது.

வரவழைத்த முன்னாள் காதலர்
அதன்பிறகு, அவர் தொடர்ந்து தனது முன்னாள் காதலியிடம் தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அப்பெண் ஒப்புக்கொள்ளாததால் மனோஜ், பிரவீன் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி பெண் ஒருவர் மூலம் பிரவீன்குமாரை இன்ஸ்டாவில் தொடர்ப்பு கொள்ள வைத்த மனோஜ், அவரை தனியாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வரவழைத்துள்ளார். அதனை நம்பி பிரவீன்குமாரும் அங்கு செல்ல, சம்பவ இடத்துக்கு வந்த மனோஜூம், கார்த்திகேயனும் இரவாகிவிட்டதால் காலையில் போட்டோஷூட் வைத்துக்கொள்ளலாம் எனக்கூறி பிரவீன்குமாரை அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

சரண் அடைந்தவர்கள் கைது
பின்னர், அவருக்கு அதிகளவு மதுவை ஊற்றிக்கொடுத்த நபர்கள், அவரை நிலைகுலைய செய்தனர். அடுத்து வீட்டிற்கு செல்லலாம் எனக்கூறி, அவரை காரின் முன்பக்க இருக்கையில் அமர வைத்துள்ளனர். அப்போது பின்புறம் இருந்த மனோஜ் மற்றும் கார்த்திகேயன், திடீரென மறைத்து வைத்திருந்த கயிற்றால், கழுத்தை இறுக்கி கொ* செய்து உள்ளனர். பின்னர் இதனை தற்கொ* போல சித்தரிக்க சடலத்தை அங்குள்ள தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்ற நிலையில் அந்த வழியாக வந்த ரயில்கள் சடலத்தின் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதறியுள்ளது. சரணடைந்த இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.