Also Watch
Read this
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக,ஊத்தங்கரை எம்.எல்.ஏ.வை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனிடம் திமுகவினர் பேரம் பேசியதாக பகீர் புகார் எழுந்துள்ள நிலையில், இம்முறை வெறும் வாய் புகாராக இல்லாமல் ஆடியோ ஆதாரமும் கிடைத்து உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில், தவெக எம்.எல்.ஏ. சரவணனிடம் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக சொல்லப்படும் அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

இதுவரை இல்லாத அரசியல்...
தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில், திரில்லர் படங்களை விஞ்சும் அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 1967, 77ல் நடந்ததை போல் 2026 தேர்தலில் வரலாறு திரும்பும் என சொல்லி அடித்த தவெகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இதனால் தமிழகத்திற்கு ஒத்து வராத என காலம் காலமாக கூறி வந்த பழைய பஞ்சாங்க கதையை மாற்றி எழுதி கூட்டணி ஆட்சி அமைத்தது தவெக. ஆனால், கூட்டணி ஆட்சி என்ற பட்டம் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடலாம் என்பதால் தவெக பதற்றத்தில் இருந்த போது தான், அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து விட்டு தூய சக்தியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுக vs தவெக
இதனால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள தவெக குதிரை பேரம் செய்வதாக குற்றம் சாட்டிய எதிர்க் கட்சிகள், ஒரே நாளில் ஆளுநர் மாளிகையின் வாசலில் வந்து நின்றது அனைவரையும் உற்று நோக்க வைத்தது. இதற்கிடையே தான், தங்களது எம்.எல்.ஏ.க்களை திமுக விலை பேசி, அவர்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாக போட்டி குற்றச்சாட்டை முன் வைத்தது தவெக. தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளைய ராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் வெளியான தகவல் பூகம்பத்தை கிளப்பியது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் சிக்கியிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

ரூ.50 கோடி வரை பேரம்
மக்களால் அமைக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்க்க சதி நடப்பதாக எழுந்த புகார் தமிழக அரசியல் களத்தில் தீயை கொளுத்தி போட்ட நிலையில், அதனை சீண்டி விடும் விதமாக குதிரை பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன். திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் நெல்லையில் தியேட்டர் வைத்து நடத்தும் முத்து ராம் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு திமுகவில் இணைவதற்காக 50 கோடி ரூபாய் வரை பணம் தருவதாக கூறி பேரம் பேசியதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

அதிர்ச்சி தெரிவித்த தவெக எம்எல்ஏ
கடந்த ஒரு மாத காலமாகவே, அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் என்ற பெயரில் தொலைபேசி மற்றும் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து சிலர் பேரம் பேசியதாக கூறிய சரவணன், மிரட்டி அடிபணிய வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்மை லாரி ஏற்றி கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டதாக கூறி அதிர வைத்தார்.

சக்தி வாய்ந்த ஆதாரம்
இத்தனை நாட்களாக குதிரை பேரம் செய்வதாக வெறும் வாய்ச் சொல் புகாராக மட்டுமே இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஆடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. இதனால் அதன் உண்மை தன்மையை ஆராயும் பணியில் உளவுத் துறை இறங்கியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று பேரம் பேசியது தொடர்பான ஆடியோ, செல்போன் எண்களை உளவுத் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஒருவேளை ஆடியோ உண்மை என நிரூபணமானால், குதிரை பேர புகார் சண்டையில் தவெகவுக்கு கிடைத்த சக்தி வாய்ந்த அஸ்திரமாக இது மாறி விடும் என்பதால் திமுக இதனை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.