Also Watch
Read this
தவெக ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சியை சேர்ந்த ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதன் பின்னால் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மூளையாக உள்ளதாகவும், எம்எல்ஏக்களை இழுக்கும் சதித்திட்ட பிராஜக்டுக்காகவே 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கிண்டியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில்தான் குதிரை பேர பிராசஸ் நடந்ததாகவும், விஷயம் வெளியில் கசிந்ததால் அந்த கார்ப்பரேட் கும்பல் அறைகளை காலி செய்துவிட்டு அரக்க பறக்க ஓடியதாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து பரபரப்பு
தவெக வரவால், அரசியல் வட்டாரத்தில் அடுத்தடுத்து நிகழும் பரபரப்பு பஞ்சமின்றி நீண்டு கொண்டே தான் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசி, அதற்கு மசியாததால் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் IPDS அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசு, ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது எப்ஐஆர் பதிவானது. இந்நிலையில், கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் விசாரணையில் கண்களை அகல விரிக்கும் அளவுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.180 கோடி நிதி
இந்த குதிரை பேர பிராஜக்டை கையில் எடுத்திருந்ததே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தானாம். ஒரு வீடு கட்ட பிளான் போடுவதுபோன்று ஒவ்வொரு தவெக எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்க பக்காவாக திட்டம் தீட்டி இருந்த அந்த கார்ப்பரேட் நிறுவனம், திருநாவுக்கரசு மூலமாக இளையராஜாவுக்கு 35 கோடி ரூபாய் என்ற ஆசைத்தூண்டிலை வலைவிரித்து பார்த்துள்ளது. அதோடு, தவெக ஆட்சியை மொத்தமாக கரப்பான்பூச்சி போன்று கவிழ்க்க 180 கோடி ரூபாயை சதித்திட்ட நிதியாகவும் ஒதுக்கி வைத்திருந்தார்களாம்.

மேலும், கிண்டியில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு தான் தவெக எம்.எல்.ஏக்களை வரவழைத்து, பயங்கர கவனிப்புடன் ராஜதோரணையில் பேரத்தை நடத்தி நேக்காக தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டிருந்தார்களாம். அதன்படிதான், தவெக எம்எல்ஏக்களின் லிஸ்ட்டை தயாரித்து, அதில் சென்னையை சேர்ந்த ஒரு எம்எல்ஏ உட்பட பல எம்எல்ஏக்களிடம் கார்ப்பரேட் நிறுவனத்தினர் பேரம் பேசியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரூ.180 கோடி யாருடையது?
கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட அந்த ஸ்டார் ஓட்டலில் குடியிருந்து எம்எல்ஏக்களை அழைத்துப் பேச முயற்சி செய்த அந்த கார்ப்பரேட் கும்பலுக்கு விஷயம் வெளியில் கசிந்தது எப்படியோ தெரியவந்ததால் கூடாரத்தை பாதியிலேயே காலி செய்துவிட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இப்படி, குதிரை பேர விவகாரத்தில் அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி வெளியாகி உள்ள நிலையில் தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மூளையாக செயல்பட்ட அந்த கார்ப்பரேட் நிறுவனம் எது? அந்த நிறுவனம் யாருடையது? அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆட்சியை கவிழ்ப்பதால் என்ன லாபம்? அந்த கார்ப்பரேட் நிறுவனம் யாருக்காக இந்த சூழ்ச்சி வேலையில் இறங்கியது? சதித்திட்ட பிராஜக்டுக்காக 180 கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுத்தது யார்?


கோடிகளில் கிடைக்கும் கமிஷனுக்காக மட்டும்தான் குதிரைபேர பிராஜக்டை கார்ப்பரேட் நிறுவனம் கையில் எடுத்ததா? அப்படியென்றால் எத்தனை கோடி கமிஷன் அந்த நிறுவனத்திற்கு பேசப்பட்டுள்ளது? என காவல்துறை உயரதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.

களத்தில் தனிப்படை போலீசார்
இது ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அசோக் குமாருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பெரிய லிஸ்ட்டோடு தனிப்படை போலீசார் களமிறங்கி உள்ளனர்.