Also Watch
Read this
தவெக ஆட்சியில் கைது செய்யப்பட்ட முதல் திமுக எம்எல்ஏ என சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பின்னணி என்ன?

அசைக்க முடியாத சக்தி
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். கால் நூற்றாண்டு காலமாக தூத்துக்குடி மாவட்ட அரசியலைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு அசைக்க முடியாத சக்தி. அதிமுகவில் பவர்ஃபுல் அமைச்சர், திமுகவில் செல்வாக்குமிக்க மாவட்டச் செயலாளர். 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எனத் தமிழக அரசியலில் தனி முத்திரை பதித்த அனிதா ராதாகிருஷ்ணனின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது தான்...

முதலில் வியாபாரி...
1952ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள தண்டுப்பத்து என்ற கிராமத்தில் ராமமூர்த்தி நாடார் - பசுங்கிளி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராதாகிருஷ்ணன். பியூசி வரை படித்தவர், ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடவில்லை. மதுரையை மையமாகக் கொண்டு பாத்திர வியாபாரம் மற்றும் கல்குவாரி போன்ற தொழில்களில் ஈடுபட்டு, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவே தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில், மதுரையில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்தவர், பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறினார்.

திருச்செந்தூரில்...
அதிமுகவில் இருந்து திமுக சென்று, பிறகு அங்கிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த காளிமுத்து மூலமாக, ஜெ.ஜெயலலிதாவின் அறிமுகம் இவருக்குக் கிடைக்கிறது. மதுரையில் தொழில் பின்புலமும், அவர் சார்ந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும் இருந்ததால், 2001 சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் முதன்முறையாகக் களம் கண்டார். முதல் தேர்தலிலேயே பிரம்மாண்ட வெற்றி. இவரது தேர்தல் பணிகளைக் கண்டு வியந்த ஜெயலலிதா, இவருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கினார். அதுமட்டுமன்றி, தனது அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வீட்டுவசதி வாரிய அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளையும் கொடுத்தார்.

தீவிர விசுவாசி...
அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அனிதா ராதாகிருஷ்ணன் வலம் வந்தார். அவருடைய மகன் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா, இனி அவர் எப்போது எம்எல்ஏ ஆனாலும் அமைச்சர் ஆவார் என்று கூறினார். 2006ல் அதிமுக ஆட்சியை இழந்தபோதும், திருச்செந்தூரில் மீண்டும் வென்று ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகத் தொடர்ந்தார். ஆனால், அரசியல் சக்கரம் சுழன்றது.

அதிமுக டூ திமுக
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் உள்ளூர் தலைவர்களுடன் ஏற்பட்ட கடுமையான உட்கட்சி மோதல் காரணமாக, 2009 ஜூலை 30 அன்று கட்சி விரோத நடவடிக்கைக்காக அனிதா ராதாகிருஷ்ணனை அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். அப்போது தென் தமிழக திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மு.க.அழகிரி இவருக்கு உடனே தூது அனுப்பினார். அழகிரியின் வியூகத்தால், ஆகஸ்ட் 11, 2009 அன்று கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

ஜெயலலிதாவுக்காக குரல்
தொடர்ந்து, 2009 டிசம்பரில் நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நின்று, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வென்றார்.
திமுகவிலும் இவரது பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. மாவட்ட அளவிலான அரசியலில், திமுகவில் ஏற்கெனவே ஜாம்பவான்களாக இருந்தவர்களை தாண்டி எதுவும் செய்ய முடியாத அதிருப்தியும் இருந்தது. இதற்கிடையில் 2014-2015 கால கட்டத்தில் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்ட போது, அந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருக்காக பதவியை ராஜினாமா செய்து அந்த இடத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்ய வேலை செய்வேன் எனவும் பேசினார்.

திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
இதனால் 2015ஆம் ஆண்டு கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, திமுகவிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு மீண்டும் , சில மாதங்களிலேயே சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உயர்ந்தார்.
2021ல் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2026 பொதுத்தேர்தலிலும் திருச்செந்தூரில் வென்று, தனது 7ஆவது சட்டமன்ற வெற்றியைப் பதிவு செய்தார்.

குறைவில்லாத சட்டப்போராட்டம்
அதிகாரம், செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும், இவரைச் சுற்றியுள்ள சட்டப் போராட்டங்களும் குறைவில்லை. 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2.07 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையும் , அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும்தொடர்ந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இவருக்குச் சொந்தமான 18 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக, சமீபத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், முன்ஜாமின் மறுக்கப்பட்டு ஜூலை 3, 2026 அன்று அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

அதிமுக, திமுக என தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளிலும் முத்திரை பதித்த அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம், பல சோதனைகளையும் சாதனைகளையும் கடந்து இன்றும் பரபரப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.