Also Watch
Read this
மதுரையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர், டாப் அதிகாரிகளை திரட்டி நடத்திய திடீர் ஆய்வு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியிருக்கிறது. மாநில நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழைந்து ஆளுநர் நடத்திய ஆய்வு, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், ராஜ் பவனுக்கு எதிராக ஒரு பெரும் அரசியல் யுத்தத்திற்கும் வழிவகுத்துள்ளது.

மதுரையில் ஆளுநர்
மதுரையில் கொளுத்தும் வெயிலை விட, இப்போது ராஜ்பவன் கிளப்பியிருக்கும் அரசியல் அனல் தான் கோட்டை வட்டாரத்தையே தகதகக்க வைத்து கொண்டிருக்கிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சவுராஷ்டிரா கல்லூரி மேடையில் ஏறிய பொறுப்பு ஆளுநர் அர்லேகர், வைகை ஆற்றின் வறட்சியை பார்த்துவிட்டு ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டார். மைக்கை பிடித்தவர் சும்மா இருக்காமல், நேரடியாக ஆளும் தரப்பின் நெற்றிக்கண்ணை தட்டுவது போல பேசினார்.

"மதுரை வைகை ஆறு இருக்கு, ஆனா நீர் இல்லை, இதுக்கு நாம எல்லாரும் தான் பொறுப்பு. துப்பாக்கி தூக்கிட்டு போருக்கு போறது மட்டும் தேசப்பற்று இல்லை, நதிகளை மீட்கிறதும் தேசப்பற்று தான். மதுரை இளைஞர்கள் வைகையை மீட்க முன்வரணும், இல்லையன்னா, ஆளுநர் மாளிகையே வைகையை சீரமைக்க களமிறங்கும்," என்றார். யார் செய்யவில்லை என்றாலும், நான் செய்வேன் என்கிற ரேஞ்சுக்கு ஆளுநர் கொடுத்த இந்த அல்டிமேட்பேச்சு தான் ஆளுங்கட்சிக்கு சுருக்கென தைத்திருக்கிறது.

களத்தில் நின்ற ஆளுநர்
பேச்சோடு நின்றிருந்தால் பரவாயில்லை, அடுத்த சில மணி நேரங்களிலேயே மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர் என ஒட்டுமொத்த டாப் அதிகாரிகளையும் அழைத்து, ஆளுநர் ஒரு ரிவ்யூ மீட்டிங்கை நடத்தியதாக தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இப்படித்தான் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினார். அப்போது, எதிர்க்கட்சியான திமுகவினர் போகும் இடமெல்லாம் கருப்புக்கொடியை காட்டி ரகளை செய்தது. இப்போது, அதே தக்காளி சட்னி கதையாக, பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மீண்டும் ஆய்வை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமித்ஷா உடன் சந்திப்புக்கு பிறகு...
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமன பதவியில் இருக்கும் ஆளுநர், அதிகார வரம்பை தாண்டி ஆய்வு நடத்துவது அப்பட்டமான அதிகார துஷ்ப்பிரயோகம் என ஆளுங்கட்சியான தவெகவும், அதன் கூட்டணி கட்சிகளும் களம் இறங்கியுள்ளன. அரசு நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் மாளிகை முயல்கிறது என்பதே இவர்களின் ஒட்டுமொத்த குமுறல். டெல்லிக்கு காவடி தூக்கும் ஆளுநருக்கு, தமிழ்நாட்டின் மீது என்ன அக்கறை வேண்டிக்கிடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் வன்னி அரசு,

கடந்த 1ஆம் தேதி டெல்லியில அமித்ஷாவை போய் பார்த்த அர்லேகர், அப்போது தமிழ்நாட்டின் நலனுக்காக பேசினாரா, இல்லை என்றால் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆலோசனை பெற்று வந்தாரா? என ஆளுநரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார். அதோடு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக, தமிழ்நாட்டை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை ஆளுநர் ஏன் தட்டிக் கேட்கவில்லை? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - நிர்மல்குமார்
ஆளுநரின் இந்த திடீர் ரிவ்யூ மீட்டிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மதுரையில் நடந்த குழு கூட்டத்தில் அமைச்சரும், மார்க்சிஸ்ட் எம்.பி.யும் ஆளுநருக்கு எதிராக பேசி அதிர வைத்தனர். கூட்டத்தில் மைக் பிடித்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், அரசுத் திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனத் தெறிக்கவிட்டார்.

ஈகோ யுத்தம்...
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய அரசியல் சாசனப்படி எங்களுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது என்றும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் யாரும் ஆளுநரின் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க கூடாது,

மீறிப் போனால் அடுத்த கூட்டத்தில் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் எம்பி. வெங்கடேசன் காட்டமாக தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமா? இல்லை ஆளுநர் மாளிகையா? என்கிற ஈகோ யுத்தம் தமிழ்நாட்டில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.