Also Watch
Read this
உலக கோப்பை கால்பந்து தோல்வியால், பிரேசில் இளவரசனின் 16 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது.

ஒரு சகாப்தத்தின் சர்வதேச பயணம்
"நான் முயன்றேன், பலமுறை முயன்றேன், ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது. இங்கு தான் தொடங்கினேன், இங்கேயே முடித்துக் கொள்கிறேன்," என்ற வார்த்தைகளோடு உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் இதயங்களை உடைத்திருக்கிறார் பிரேசிலின் ஆகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் நெய்மர் ஜூனியர்.

2026ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பைத் தொடரின் round of 16 சுற்றில் நார்வே அணிக்கு எதிராக பிரேசில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த அடுத்த நிமிடமே, தனது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு உணர்ச்சிப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்து, சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் 34 வயதான இந்த கால்பந்து இளவரசன். சாண்டோஸில் பிறந்து உலகையே தனது கால் வித்தைகளால் கட்டிப்போட்ட ஒரு சகாப்தத்தின் சர்வதேச பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

தன் பக்கம் திரும்ப வைத்த...
நெய்மரின் கால்பந்து பயணம், ஆடம்பரமான மைதானங்களில் தொடங்கவில்லை. பிரேசிலின் தெருக்களிலும், இன்டோர் Futsal மைதானங்களிலும் தான் செதுக்கப்பட்டது. தனது தந்தை நெய்மர் சீனியரின் வழிகாட்டுதலில், 2003ல் சாண்டோஸ் கிளப்பில் இணைந்தார்.

வெறும் 17 வயதில் தொழில்முறை கால்பந்து போட்டிகளில் அறிமுகமான நெய்மர், பிரேசிலின் அடுத்த பீலே என்று உலகால் கொண்டாடப்பட்டார். பந்தை கால்களால் கடத்தும் அவரது Dribbling ஸ்டைலும், எதிரணி வீரர்களை ஏமாற்றும் நளினமும் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன் பக்கம் திரும்ப வைத்தது.

கால்களால் பெற்ற தங்கப்பதக்கம்
நெய்மரின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், 2013ல் அவர் பார்சிலோனா அணியில் இணைந்தது தான். மெஸ்ஸி மற்றும் சுவாரெஸ் உடன் இணைந்து அவர் உருவாக்கிய MSN கூட்டணி, கால்பந்து வரலாற்றின் மிகப் பயங்கரமான தாக்குதல் கூட்டணியாக மாறியது.

2015ல் பார்சிலோனா Treble பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின், 222 மில்லியன் யூரோ என்ற உலக சாதனை விலைக்கு பிஎஸ்ஜி அணிக்கு மாறினார். சர்வதேச அரங்கில், 2013 கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பிரேசிலுக்கு முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தனது கால்களால் அடித்து பெற்றுத் தந்தார்.

ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவையாக...
திறமைகள் எவ்வளவு இருந்ததோ, அதே அளவு காயங்களும் நெய்மரை சோதித்தன. 2014ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில், கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கொடூரமான முதுகுத்தண்டு காயம் ஒட்டுமொத்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவையும் சிதைத்தது.

அதன் பிறகு ஒவ்வொரு முக்கிய தொடரிலும் எதிரணி வீரர்களின் கடுமையான Tackling மற்றும் தொடர் காயங்கள் அவரை மைதானத்தை விட்டு தள்ளியே வைத்தன. அவரது உடல்நிலை மற்றும் விளையாட்டு மீதான விமர்சனங்கள் எழுந்தபோதும், ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவையாக அவர் மீண்டு வந்தார்.

உலக சாதனை படைத்த ஒரே வீரர்
நெய்மர் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அவர் படைத்த சாதனைகள் என்றும் அழியாதவை. பிரேசில் நாட்டின் வரலாற்றில் ஆகச்சிறந்த லெஜண்ட் பீலேவின் சாதனையை முறியடித்து, 130 போட்டிகளில் 80 கோல்களுடன் பிரேசில் அணியின் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை நெய்மர் தன்வசப்படுத்தி உள்ளார்.

மேலும், பிரேசில் அணிக்காக 59 அசிஸ்டுகளையும் செய்துள்ளார். பீலேவுக்குப் பிறகு 4 வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே பிரேசில் வீரர் நெய்மர் மட்டுமே.

என்றும் மகிழ்விக்கும்...
2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தான் பிரேசில் அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார்.

அதே மைதானத்தில் நார்வேக்கு எதிராக பெனால்டி மூலம் தனது கடைசி சர்வதேச கோலை அடித்து, கால்பந்து உலகில் இருந்து விடைபெற்றுள்ளார். கார்லோ அன்செலோட்டியின் பிரேசில் அணி, இனி அடுத்த தலைமுறையை நோக்கி நகர உள்ள நிலையில், கால்பந்தை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் ஒரு கலையாக மாற்றிய இந்த ஜோகா போனிட்டோ நாயகனை கால்பந்து உலகம் எப்போதும் மிஸ் செய்யும்.

நன்றி நெய்மர்... உங்களது மேஜிக் எங்களை என்றும் மகிழ்விக்கும்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved