Also Watch
Read this
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக,நரேஷிடம் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அசைன்மெண்ட் ஒப்படைத்ததாகவும், எம்எல்ஏக்களை திமுக பக்கம் இழுக்க கோடிகளை நிர்ணயம் செய்ததாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சதித்திட்டத்தில் கை கோர்த்த திருநாவுக்கரசுக்கு, நரேஷிடம் இருந்த கோடிகள் கண்ணை உறுத்தியதாகவும் அந்த கோடிகளை சுருட்ட ஏற்பட்ட சண்டையில்தான் குதிரைபேர விவகாரமே வெளியில் கசிந்தது என்ற விஷயமும் அம்பலமாகி உள்ளது.

குதிரை பேர வேலையில்...
தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த குதிரை பேர வேலையில் அடுத்தடுத்து வெளியாகும் ஒவ்வொரு தகவலுமே அதிர்ச்சிகரம் தான். குதிரை பேரத்திற்காகவே 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அந்த சதிவேலையை கையில் எடுத்ததே ஒரு கார்ப்பரேட் நிறுவனம்தான் எனவும், கிண்டியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வைத்து தான் பேரத்தை நடத்த திட்டமிருந்ததாகவும், அந்த தகவல் லேசாக லீக் ஆக, பேர கும்பல் விருட்டென பறந்ததாகவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

செந்தில்பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
இதனிடையே, எப்ஐஆரில் பதிவாகி இருந்த செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாரும், வழக்கில் பதிவாகாவிட்டாலும் பேர விவகாரத்தில் முக்கியப்புள்ளி என பெயர் அடிபடும் செந்தில் பாலாஜியும் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, சகோதரர்களுக்கு எதிரான பிடி இறுகியது.
சம்மன் அனுப்பியும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அண்ணனும், தம்பியும் ஆஜராகவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் குதிரைபேர விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தவெக எம்எல்ஏக்களை...
திருச்சியை சேர்ந்த நரேஷை தான் முதலில் அணுகினாராம் அசோக்குமார். என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது, தவெக எம்எல்ஏக்கள் சிலரை நம் பக்கம் இழுத்தே ஆக வேண்டும், அதற்கு சில கோடிகள் கரைந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என அசைன்மெண்ட் கொடுத்தாராம். அந்த அசைன்மென்ட்டை வாங்கிய நரேஷ், தனது ஓட்டுநர் கிருஷ்ணாவின் காதில் போட்டுள்ளார். ஏற்கெனவே IPDS அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசுவிடம் டிரைவராக வேலை பார்த்த கிருஷ்ணா, பழைய பாஸ்க்கு போன் செய்து அசைன்மெண்ட் டீட்டெய்ல்ஸை எடுத்துக்கூறியதாக தெரிகிறது.

ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை
அமர்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு நோகாமல் கோடிகளை வாரி சுருட்ட கசக்குமா என்ன? என ஒரு மனக்கணக்குப் போட்ட திருநாவுக்கரசு, எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம் எனக்கூறி உள்ளார். அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் நரேசும், திருநாவுக்கரசும் சந்தித்துள்ளனர். அடுத்து, அந்த ஸ்டார் ஓட்டலுக்கு அசோக்குமாரும் வர, திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சீரியஸாக நடந்ததாம்.

அப்போது, ஒரு எம்எல்ஏவுக்கு குறைந்தபட்சம் 30 கோடி, அதிகபட்சம் 50 கோடி கொடுக்கலாம் என நிர்ணயம் செய்த அசோக் குமார், இதுதான் உங்களுடனான தனது முதல் சந்திப்பும், கடைசி சந்திப்பும் இனிமேல் கரூர் கம்பெனியை சேர்ந்த அதிபன் ரமேஷ், கார்த்திக் ஆகிய இருவர்தான் உங்களை தொடர்பு கொள்வார்கள், நீங்களும் எதுவாக இருந்தாலும் அவர்களிடம்தான் பேசிக்கொள்ள வேண்டும் என உஷாராக கோர்த்துவிட்டு அங்கிருந்து இடத்தை காலி செய்துவிட்டாராம்.

கோடிகள் மீது கண்
இதன் பின்னால் இருக்கும் தலைவன் கணக்கு விவரத்தை சரியாக அறியாத திருநாவுக்கரசு, தன்னுடன் தியாகராஜன் என்பவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு 2 நாட்கள் ஸ்டார் ஓட்டலிலேயே தங்கி இருந்து சில தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசும் வேலையை ஆரம்பித்துள்ளார். "ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை" என்பதுபோல இந்த சதித்திட்டத்தில் கை கோர்த்தாலும் இது எப்போது முடிவது? எப்போது மொத்த பணத்தை பார்ப்பது? என ஏக்கப் பெருமூச்சுவிட்ட திருநாவுக்கரசுக்கு நரேஷின் கையில் இருந்த கோடிகள் மீது அப்படி ஒரு கண்ணாம். அந்த பணத்தை பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே குறியாக இருந்த திருநாவுக்கரசு, குதிரைபேர விவகாரத்தில் லேசாக கோட்டை விடுவதுபோல் நரேசுக்கு தெரிந்துள்ளது.

ஓட்டலில் வைத்தே வாக்குவாதம்
இதுதொடர்பாக சின்ன சின்ன வாக்குவாதமும் நடந்துள்ளது. இதனிடையே, ஏற்கெனவே ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு நான்கைந்துமுறை போன் செய்திருந்த திருநாவுக்கரசு, மதுபோதையில் போன் செய்துள்ளார். அதனை எம்எல்ஏ இளையராஜா ரெக்கார்டு செய்து வைத்துள்ளதாகவும், அதனையும் காவல்துறையில் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க, பணத்தின் மீதே குறியாக இருந்த திருநாவுக்கரசுக்கும், அதனை கட்டிக்காத்துக் கொண்டிருந்த நரேஷ்க்கும் ஸ்டார் ஓட்டலில் வைத்தே சண்டை மூண்டதாக தெரிகிறது.

இன்னும் என்னென்ன அதிர்ச்சி?
இதனால், சதித்திட்டம் ஓட்டலில் இருந்தவர்களுக்கும் தெரியவர குதிரை பேர கும்பல் அங்கிருந்து பறந்தார்களாம். தவெக ஆட்சியை கவிழ்க்க தீட்டப்பட்ட திட்டம் தொடர்பாக தினம்தினம் அதிர்ச்சி தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரரும் பிடிபட்டால் இன்னும் என்னென்ன அதிர்ச்சி தகவல் எல்லாம் வெளியாக போகிறதோ?