Also Watch
Read this
நடந்து முடிந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் வேண்டுமென்றே மிகக் கடினமான முறையில் கேட்கப்பட்டிருந்ததாக ஆசிரியர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவதைத் தடுக்கும் நோக்கில், ஆசிரியர்களை தேர்வு சிக்கலிலேயே உழல வைக்க, அரசு முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு முக்கிய தேர்வு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடந்து முடிந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2011ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடர்ந்து பணியில் நீடிக்க முடியும் என்பதால், ஆசிரியர்கள் மத்தியில் இது மிக முக்கியமான தேர்வாகப் பார்க்கப்பட்டது.

வினாக்கள் மிக கடினமானவை
இந்நிலையில், நடந்து முடிந்த இந்த டெட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாடத்திட்டத்தை தாண்டி, மிகக் கடினமான முறையில் கேட்கப்பட்டிருந்ததாக ஆசிரியர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர்களுக்கு 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எட்டாம் வகுப்பு வரையிலுமே கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வினாத்தாளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற கடினமான வினாக்கள் கேட்கப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

மறைமுகச் சதி என அச்சம்
இதற்குப் பின்னால், தமிழக அரசின் திட்டமிட்ட உள்நோக்கம் இருக்குமோ என்ற பலத்த சந்தேகத்தை ஆசிரியர் சங்கங்கள் எழுப்பியுள்ளன. 20 முதல் 30 ஆண்டுகளாகப் பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் நடத்தி வரும் தங்களை, குரூப் 1 அல்லது UPSC தரத்திலான கேள்விகளை எதிர்கொள்ள வைப்பது தங்களை வேலையை விட்டு நீக்குவதற்கான மறைமுகச் சதியோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

பணியை இழக்கும் மோசமான சூழல்
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவதைத் தடுக்கும் நோக்கில், அவர்களை இத்தேர்வு சிக்கலிலேயே உழல வைக்க அரசு முயல்வதாகவும் பகீர் புகார்கள் எழுந்துள்ளன.

தற்போது 50 முதல் 55 வயதைக் கடந்த நிலையில் இருக்கும் தங்களால் இந்த வயதில் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று 12ஆம் வகுப்பு பாடங்களைப் படிப்பது சாத்தியமற்றது என்று வேதனை தெரிவிக்கும் ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பதவி உயர்வு முடக்கப்படுவதோடு, 2028க்குள் பணியை இழக்கும் மோசமான சூழலும் உருவாகியுள்ளது என்றும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

ஆசிரியர்கள் வேண்டுகோள்
எனவே, ஆசிரியர் சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, பிற மாநிலங்களைப் போல தங்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.